“ஒருபோதும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க மாட்டேன். அவர்களும் என்னை சந்திக்க விரும்ப மாட்டார்கள்” என புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு விடுதலையான பின் நளினி பிரத்யோக பேட்டியளித்துள்ளார்.
இதை படிங்க:
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தால் விடுதலை பெற்ற நளினி, புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர், “நானும் எனது கணவர் முருகனும் நிச்சயமாக இலங்கைக்கு செல்ல மாட்டோம். லண்டனில் உள்ள எங்களது மகளிடம் செல்லவே விரும்புகிறோம். அதற்காக நடைமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் எடுக்க வேண்டி உள்ளது. ஆகவே நாங்கள் லண்டனிற்கு செல்ல அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
`விடுதலைக்குப் பிறகு ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரையோ அல்லது நீங்கள் சிறையில் இருக்கும் போது உங்களை வந்து சந்தித்த பிரியங்கா காந்தியோ சந்திக்க வாய்ப்பு உள்ளதா அல்லது அவர்கள் உங்களை சந்திக்க நேரிட்டால் என்ன செய்வீர்கள்’ என கேட்டதற்கு, “நிச்சயமாக அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடையாது, அதேபோல அவர்களும் என்னை சந்திக்க விரும்ப மாட்டார்கள்” என கூறினார். மேலும், “விடுதலைக்குப் பிறகு எனது கணவரை முகாமுக்கு அழைத்து சென்றது வருத்தமாகத்தான் இருக்கிறது. விரைவில் அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.
முன்னதாக ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலை பெற்ற முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்தும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் இருந்தும் விடுதலையான நிலையில், அனைவரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். அவரவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்லும் வரை, நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருப்பார்கள் என சொல்லப்பட்டுள்ளது.
பொதுவான செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது நளினி, “விடுதலைக்குப் பிறகும் எனது கணவர் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது எனக்கு வருத்தம்தான். ஆனால் அவரே என்னிடம், `கவலைப்பட வேண்டாம்’ என தெரிவித்தார். 32 வருடங்கள் சிறையில் கனிந்ததால் எங்களுக்கு என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது, சொல்லுங்கள்? இப்போது, அப்பா அம்மா என இருவரும் தனக்கு கிடைத்து விட்டார்கள் என எனது மகள் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறாள். எனது மகள் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, `மனதில் எந்த கஷ்டத்தையும் வைத்துக் கொள்ளாமல் நன்றாக என்ஜாய் பண்ணுங்க அம்மா’ என சொன்னார். நானும் எனது கணவரும் மகளுடன் செல்ல உள்ளோம்.
இந்த விடுதலையை ஒரு அதிசய நிகழ்வாகவே எனது கணவர் பார்க்கிறார். இன்னும் தாமதம் ஆகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை முயற்சித்துக் கொண்டே இருந்தோம். அவர் என்னென்ன செய்கிறார் என்பதை நானும் தொடர்ந்து வந்தேன். எழுவர் விடுதலை என நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் விடுதலை வந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பிறகு தான் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தை நாடினோம். அப்போதெல்லாம் என் கணவர் என்னிடம், `நீ என் மகாராணி. நீ யாரிடமும் கையேந்த கூடாது. நான் உன்னை பார்த்து கொள்வேன்’ என கூறுவார். அவர் உள்ளவரை எனக்கு கவலை இல்லை” என்றார்.
தொடர்ந்து நளினியிடம்`தங்களுடைய விடுதலைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களே’ என்பது குறித்து கேட்டதற்கு, “32 வருடங்கள் சிறையில் இருந்து விட்டோமே… அது அவர்களுக்கு திருப்தியாக இல்லையா? ராகுல் காந்தி, சோனியா, பிரியங்க இவர்களை சந்திக்க வாய்ப்பே இல்லை. பிரியங்கா காந்தி என்னை சந்தித்து விட்டு சென்ற பிறகு அவர் பத்திரமாக செல்ல வேண்டும் என நான் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டேன்.
எல்லோருமே எல்லாவற்றையும் எப்போதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தவறு. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. மற்றவர்களின் கருத்தையும் உள்வாங்கி அதற்கேற்றது போல் நடந்து கொள்ள வேண்டும். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும் என எனது தலையில் எழுதி உள்ளது. அதெற்கென்ன செய்வது? மாற்றுக் கருத்தும் இருப்பவர்கள் பற்றி எதுவும் சொல்ல முடியாது அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். சிறை என்பது ஒரு இருட்டறை. அங்கிருப்போருக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஒரு சின்ன விஷயத்தை கூட சொல்ல ஆட்கள் இருக்க மாட்டார்கள். பரோலில் வந்த பிறகுதான் உச்சநீதிமன்றத்தை எப்படி அணுகுவது என்று தெரிந்து கொண்டேன். அதேபோல இவ்வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரன் உடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அவருடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் உச்சநீதிமன்றத்தை அனுகினோம். இதில் எனக்கு பேருதவியாக அவர் இருந்தார். சிறையில் இருந்த போது நேரமே போகாது. இதற்கு முன்னால் இருந்த ஐஜி ஒருவர் உதவியோடு தான் நான் படித்தேன். அவர்தான் என்னை படிக்க சொல்லி வற்புறுத்தினார்.
ஆனால் சிறைச்சாலை ஒரு நரகம், சாக்கடை, புதகுளி, சுடுகாடு போல தான். உண்மையிலேயே அப்படித்தான். சிறையில் இருந்தபோதும், என் முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். எனது சிறை வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்துள்ளேன். போட்டுக்க உடை கூட இல்லாமல் தவித்துள்ளேன். ஒரு ஜெராக்ஸ் எடுக்க கூட வசதி இன்றி அவதியுற்றுள்ளேன். சிறை வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். யாராலும் போக முடியாத ஒரு பல்கலைக்கழகம் என்றால், அது சிறை தான். பல்கலைக்கழகமென சொல்லக்காரணம், அங்கு சில விஷயங்களை கற்றுள்ளேன் நான். உதாரணத்துக்கு, அங்கு நிதானத்தை பொறுமையை கற்றுக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதையும் கற்றுக் கொள்ளலாம். இப்படி என்னிடம் இல்லாத பலவற்றை அங்கு கற்றுக் கொண்டேன். மேலும் மத்திய அரசு சிறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் அதை முழுமையாக இவர்களால் செயல்படுத்த முடியவில்லை. அங்கு முடித்த கோர்ஸ்களுக்காக ஒரு சான்றிதழ் கூட வழங்கவில்லை” என்றார்.
எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு உதவியாக இருப்பேன். வழக்கு நடந்த போதும் சரி, சிறையில் இருந்த போதும் சரி… இந்த வழக்குக்காக நான் ஒருபோதும் பயப்படவில்லை. நான் யார் என்ன என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் நான் பயப்படவில்லை. நான் நானாக இருப்பேன். என்னை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார்கள். எனக்கு பரோல் கொடுத்த தமிழக அரசுக்கும் நன்றி. இந்த பத்து மாத பொருள் எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்த தருணத்தில், குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இறந்து போன பொதுமக்கள் காவல்துறை என அனைவருக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா இல்லையா? இதை எப்படி எதிர்கொண்டார்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM