புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் எப்போது வேண்டுமானாலும் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்றிரவு 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தலைநகர் டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்றிரவு ஒரே நிமிடத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்புகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட, பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் நேபாளத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது. இமயமலையை ஒட்டி டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் இருப்பதால் இம்மாநிலங்களுக்கு நிலநடுக்கத்தின் ஆபத்து அதிகளவில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் நிலநடுக்கத்தின் வரையறையை 4 பகுதிகளாக பிரித்துள்ளனர். இதில் மண்டலம்-2, மண்டலம்-3, மண்டலம்-4 மற்றும் மண்டலம்-5 ஆகியவை அடங்கும். மண்டலம் – 5 (ரிக்டர் அளவில் 9) என்பது மிகவும் ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலம் – 6 பட்டியலில் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச், வடக்கு பீகாரின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டலம் – 4ல் மும்பை, டெல்லி, மேற்கு குஜராத், உத்தராஞ்சல், உத்தரபிரதேசத்தின் மலைப்பகுதிகள் மற்றும் பீகார் – நேபாள எல்லையின் சில பகுதிகள் உள்ளன. கேரளா, பீகார், கிழக்கு குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மண்டலம் – 3ல் குறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் அரியானாவின் சில பகுதிகள் மண்டலம் – 2ல் வைக்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக ரிக்டர் அளவு 6க்கு மேல் சென்றால் மட்டுமே கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும். தலைநகர் டெல்லியை பொருத்தமட்டில் பாதிக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சாதாரண அதிர்ச்சியைக் கூட தாங்கக் கூடியதாக இல்லை. அதேநேரம் மக்கள்தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதால் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்கின்றனர். நிலநடுக்க ஆபத்தைத் தவிர்க்க எவ்வித நடவடிக்கையோ, கட்டடங்கள் கட்டுவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
தலைநகர் டெல்லியை மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளனர். ‘நிலநடுக்க ஆபத்து மைக்ரோசோனேஷன்’ என்ற தலைப்பிலான ஆய்வு அறிக்கையில், ‘நிலநடுக்க ஆபத்து பட்டியலின்படி டெல்லி மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் பெரும்பாலான பகுதிகள், வடக்கு டெல்லியின் சில பகுதிகள் மற்றும் தென்மேற்கு டெல்லியின் குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் ஆபத்து பட்டியலில் உள்ளன. தலைநகர் டெல்லியில் எப்போது வேண்டுமானாலும் 7 முதல் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பேரழிவுகள் ஏற்படலாம். எனவே தலைநகர் டெல்லியில் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மக்கள் தொகை நெருக்கமுள்ள பகுதிகள் கண்காணித்து அதனை முறைப்படுத்த வேண்டும்’ என்று எச்சரித்துள்ளது.