திருப்பரங்குன்றம்: பலத்த மழைக்கு திருப்பரங்குன்றம் அருகில் உள்ள நிலையூர் பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து நிலையூர், சம்பக்குளம், ஆலங்குளம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. நேற்று பெய்த பலத்த மழைக்கு நிலையூர் சாலையில் ரயில்வே நிலையம் அருகில் மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் இந்த சாலை வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
மேலும் மரம் அருகில் இருந்த மின்வயர்கள் மீது சாய்ந்ததால் மின்வயர்கள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், சாலையில் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் மரம் சாய்ந்ததால் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றிய பிறகு போக்குவரத்து துவங்கியது. மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டது.