மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது, முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் மட்டுமே பிரதமர் மோடி பேசினார். இதை அதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு போர்வை, உணவை ஆர்.பி. உதயகுமார் நேற்று வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரையில் நேற்று முன்தினம் பிரதமரை பலரும் சந்தித்தது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்தான் செயல்படுவோம் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தெளிவாகக் கூறிவிட்டார். இதுதான் உண்மை. ஆனாலும், ஓபிஎஸ் உடன் தொடர்புபடுத்தி பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன.
மதுரை விமான நிலையத்தில் பிரதமரை பழனிசாமி வரவேற்றார். அவருடன் நான் உள்ளிட்ட 4 பேர் சென்றோம். ஆளுநர், தமிழக அமைச்சர்கள் உட்பட 42 பேர் வரவேற்பில் பங்கேற்றனர்.
பழனிசாமியிடம் பிரதமர், ‘நன்றாக இருக்கிறீர்களா என ஆங்கிலத்தில் கேட்டதும், நலமாக இருப்பதாக பதில் அளித்தார். பழனிசாமியை தவிர பிரதமர் யாரிடமும் பேசவில்லை. அதேபோல், வழியனுப்பு விழாவின்போதும் பழனிசாமியிடம் பிரதமர் மிகுந்த பாசத்துடன் நடந்துகொண்டார். வேறு யாரிடமும் பிரதமர் பேசவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன். நான் அருகில் இருந்தபடியே முழுமையாக கவனித்தேன்.
புறப்படும்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பிரதமர் பேசினார். வேறு யாரிடமும் பேசவில்லை. பழனிசாமியிடம் பேசியது அதிமுகவுக்கும், கட்சியின் 1.50 கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். பழனிசாமி, ஓபிஎஸ் அருகருகே இருந்தாலும் யாரும் பேசிகொள்ளவில்லை என்பதே உண்மை என்றார்.