பிரபல மராத்தி டிவி நடிகை நடிகை கல்யாணி குராலே ஜாதவ் சனிக்கிழமை இரவு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 32.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல டிவி நடிகை கல்யாணி குராலே ஜாதவ் (வயது 32), துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் ஆவார். இவர் நேற்று இரவு 11 மணியளவில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாங்லி-கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹலோண்டி சந்திப்பு அருகே, அவரது இரு சக்கர வாகனம் மீது டிராக்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட நடிகை கல்யாணி பலத்த காயமடைந்தார். இதையடுத்து கல்யாணி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்யாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நடிகை கல்யாணி குராலே ஜாதவ் விபத்தில் உயிரிழந்த செய்தி, அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர், நடிகைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களுடைய இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஷிரோலி காவல்நிலைய போலீசார், டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: விஜய்யின் வாரிசுக்கு ஸ்கெட்ச் போடும் தெலுங்கு தயாரிப்பாளர் கவுன்சில்.. பரபரப்பு அறிக்கை!