மதுரை பாண்டி பஜார் ரோட்டில் நீச்சல்… மழை அட்ராசிட்டீஸ் தாங்க முடியல!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக வானிலை அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் அதிக
கனமழை
பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள பாண்டி பஜார், ரயில் நிலையத்திற்கு பயணிகள் செல்லும் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் பாண்டி பஜாரில் தேங்கிய மழை நீரில் இளைஞர் ஒருவர் நீச்சல் அடித்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த பொதுமக்கள் ‘நல்ல போதை’ என்று கமெண்ட் செய்ததை கேட்க முடிந்தது. லெப்ட் ரைட் என ரவுண்ட் கட்டி நீச்சல் அடித்ததை பலரும் வேடிக்கையாக பார்த்து ரசித்தனர். அப்பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் மழைநீர் புகுந்ததால் சேதம் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மழை நின்றதும் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்படும் என்று மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 17ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சிட்டம்பட்டி 16.2, கள்ளந்திரி 19.2, தனியாமங்கலம் 18, மேலூர் 23, சாத்தியார் அணை 27, வாடிப்பட்டி 45, திருமங்கலம் 54.6, உசிலம்பட்டி 22, மதுரை 53, விமான நிலையம் 57.2, விரகனூர் 33.4, இடையபட்டி 25, புலிப்பட்டி 18.6, சோழவந்தான் 24, மேட்டுப்பட்டி 23.8, கள்ளிக்குடி 10.6, பேரையூர் 45.2, ஆண்டிபட்டி 37.2, எழுமலை 25.2 மி.மீ அளவிற்கு மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.