மயிலாடுதுறை மாவட்டத்தில் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதோடு குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு நிதி உதவியும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. “மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், எருக்கூர் கிராமம், வடக்கு தெருவில் வசித்து வரும் ராமன் என்பவரின் ஐந்து வயது மகள் அக்ஷிதா என்ற சிறுமி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13) மாலை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த பெரிய வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்”.
இதனை செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.