சென்னை:
சீர்காழி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
விடிய, விடிய பெய்த கனமழையின் காரணமாக சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது.
இதில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் குறிப்பாக 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டி தீர்த்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை நாளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதற்காக இன்று இரவு சீழ்காழி செல்லவுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.