மழை.. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்; உடனடியாக வழங்க வந்த திடீர் கோரிக்கை!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும், நெல் பயிரிட்ட சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்ட நிலங்கள் இந்த கன மழையால் மூழ்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதிகளில் வரலாறு காணாத கன மழை பெய்ததன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தனி தீவாக காட்சி அளிக்கிறது.

கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மட்டும் சுமார் 6,000 ஏக்கர் நிலங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி இருக்கின்றன. இந்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் நெல்லுடன், வாழை, நிலக்கடலை மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அதிகாரிகளை நேரில் அனுப்பி கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகின்றேன்.

விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு, ஒரு மாத காலத்திற்குள்ளாக சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக தங்களது உழைப்பு வீணாகி போய்விட்டதே என விவசாயிகள் மனவேதனையுடன் மனக்குமுறலை எடுத்துரைக்கின்றனர்.

இதுவரை இந்த விடியா திமுக அமைச்சர்களும், அதிகாரிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு, வேளாண் பெருமக்களுக்கு ஆறுதல் சொல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி நாள் 15.11.2022 என, அரசு அறிவித்துள்ளது. எனவே பயிர் காப்பீட்டு கால அவகாசத்தை இந்த மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும்.

வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் இணைந்து விவசாயிகளிடம் நேரில் சென்று அவர்களுடைய நிலங்களை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர விடியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த ஆண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டுத் தொகையை மாநில அரசே ஏற்று பீரிமியத்தை செலுத்த வேண்டும் என, வற்புறுத்துகிறேன்.

மேலும், தற்போது பெய்த கனமழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.