தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருக்கும் ஏரிகள், குளங்கள் நிரம்பிவருகின்றன. இந்தச் சூழலில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் கனமழை நீடித்துவருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்துவருகிறது.
மேலும் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்த நிலையில் தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில், வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் படிப்படியாக தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து வரும் 15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 16ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சீர்காழியில் நேற்று வரலாறு காணாத அளவு ஒரே நாளில் 44 செ.மீ அளவு மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏராளமான பயிர்கள் நீர்ல் மூழ்கி சேதமடைந்தன. மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.