சென்னை: மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்கிறார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்தது. நவ.11ம் தேதி காலை 8.30 மணி முதல் நவ.12ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில், 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சீர்காழி அருகேயுள்ள உப்பனாற்றின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, சூரக்காடு, தென்பாதி, சட்டநாதபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் மழைநீரால் சூழப்பட்டன. மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் பகுதிகளில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகு மற்றும் 6 ஃபைபர் படகுகள், திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகு ஆகியவை கடலில் மூழ்கின.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை சீர்காழியில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதன்படி இன்று (நவ.13) இரவு சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர் மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார்.