ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திராவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக குண்டூரில் ‘இப்டம்’ என்ற கிராமத்தில் வீடுகள் இடிக்கப்பட்டன. ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.
வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து சில காட்சிகள் ஆறுதலும் தெரிவித்தன. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 5ஆம் தேதி ‘இப்டம்’ பகுதி மக்களை நேரில் சந்திக்க சென்றார்.
வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற பவன்கல்யாண், சினிமா பாணியில் காரின் மேற்கூறையில் அமர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் பவன் கல்யாண், காரின் மேற்கூறையில்அமர்ந்திருக்க, அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஓடும் காரின் ஓரத்தில் தொங்கியபடி சென்றனர். அவரது காருக்கு பின்னால் கார்களில் சிலர் உள்ளே அமர்ந்தவாரும் மற்ற சிலர் கார்களின் வலது மற்றும் இடதுபுறம் தொங்கியும் பயணித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது, பிரத்யேக ட்ரோன் மூலம் காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவர் அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாண் மீது பி. சிவகுமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவரது கார் டிரைவரின் அபாயகரமான பயணம் காரணமாக, பைக்கிலிருந்து தடுமாறி விழுந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
காரின் கூரை மீது பவன் கல்யாண் இருந்தபோதிலும், டிரைவர் படு மோசமாக காரை ஓட்டினார். பின்னால் வந்தவர்களும் பவன் கல்யாண் காரை பின் தொடர்ந்து அதிவேகத்தில் சென்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து பவன் கல்யாண் மீது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டி வந்ததாகவும், இரு சக்கர வாகனத்தில் வந்த சிவகுமார் மீது காரை மோதியதாகவும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
newstm.in