சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த 30 லட்ச ரூபாயை கோவில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்க கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளரும், இளைய பாரதம் யுடியூப் சேனலின் உரிமையாளருனான கார்த்திக் கோபிநாத் மீது கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அவர் மீது கோவிலின் செயல் அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் ஆகியோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், பதிவான வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், கோவில் திருப்பணிகளுக்காக மிலாப் செயலி மூலம் வசூலித்த 30 லட்சத்து 77 ஆயிரத்து 801 ரூபாய் 88 காசுகளை கோவில் திருப்பணிக்கான ஸ்தபதி கணக்கில் செலுத்த அனுமதிக்கவும், அதற்காக தன்னை நன்கொடையாளர் என அங்கீகரிக்கவும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.