நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவுக்குட்பட்ட மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஜன்னல் கம்பியை வெல்டிங் மிஷின் வைத்து வெட்டி கொள்ளையிட முயற்சி நடந்தது. அது வங்கி காவலாளியால் தோல்வியடைந்ததால் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியிருக்கிறது.
வேதாரண்யம் தாலுகா, மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் சுமார் 7 கோடி மதிப்புள்ள நகைகளை 1,800 பேர் அடகுவைத்துள்ளனர். மேலும் வங்கியில் ரூ.14 லட்சம் ரொக்கம் இருப்புள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் நல்ல மழை பெய்திருக்கிறது.
இதனால் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள், ஜன்னல் கம்பிகளை வெல்டிங் வைத்து உடைத்து வங்கியில் உள்ளே புகுந்து இரண்டு பூட்டுகளை உடைத்துள்ளனர். மேலும் லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது வங்கியின் காவலாளி முத்துகண்னு வந்துள்ளார். இதனைப் பார்த்த கொள்ளையர்கள் வங்கி காவலாளியை தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதனால் வங்கியில் இருந்த சுமார் 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.14 லட்சம் ரொக்கமும் தப்பின. தகவலறிந்து பொதுமக்கள் வங்கி முன் திரண்டனர்.
தகவலறிந்து வந்த கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் வங்கியில் கொள்ளைபோகவில்லை எனவும், நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தனர். இதனால் நிம்மதியடடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். வெல்டிங் செய்யப் பயன்படுத்திய காஸ் சிலிண்டரை கொள்ளையர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் சி.சி.டி.வி ஒயர்களை கட் செய்து ஹார்டுடிஸ்க்கை எடுத்துச் சென்றுள்ளனர். புகாரின்பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா தலைமையில் போலீஸார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.