சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்டத்தில், எஞ்சியுள்ள அரை கி.மீ. தூரத்துக்கு பாதை அமைக்கும் பணிகளை முடித்து, ரயில் சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
முதல்கட்டமாக கடற்கரை – மயிலாப்பூர் இடையே 9 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணிரூ.266 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 1997-ல் நிறைவடைந்தது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர் – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டப் பணி ரூ.877.59 கோடியில் கடந்த 2007-ல் முடிக்கப்பட்டது. இதன் பிறகு, வேளச்சேரி – பரங்கிமலை இடையே 3-ம் கட்ட பணி ரூ.495 கோடியில் கடந்த 2008-ல் தொடங்கியது. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த சூழலில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம் – பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கி.மீ. (500 மீட்டர்) தூரத்துக்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தன. திட்டமிட்டபடி 2010-ல் பணிகள் முடியாததால், இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது.
இதற்கிடையே, நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் கடந்த ஆண்டு தீர்வுகிடைத்தது. இதையடுத்து, ஆதம்பாக்கம் – பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கி.மீ. தொலைவுக்கான பணிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கி, முழு வீச்சில் நடந்து வருகின்றன.
புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு ரயில் பாதை, சிக்னல்கட்டமைப்புகளும் முடிவடைந்தன. பணிகள் எஞ்சியுள்ள பகுதியில் தூண்கள் அமைத்து, அதற்குமேல் பாதைகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, பாதைகள் அமைக்கப்படும். இதுதவிர, மெட்ரோ ரயில் பாதைக்காக, தூண்கள் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
இந்நிலையில், பணி நிலவரம் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) பி.ஜி.மல்லையா கூறியபோது, ‘‘நிலம்கையகப்படுத்துதல் பிரச்சினையால் 5 கி.மீ. தூரத்துக்கு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு, சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேளச்சேரி – பரங்கிமலை இடையே 5 கி.மீ. தூர பறக்கும் ரயில் வழித்தடத்தில் (எம்ஆர்டிஎஸ்) முக்கியமான இறுதிகட்ட இணைப்பு பணிகள் 2023 மார்ச்சில் நிறைவடையும்’’ என்றார். இதற்கிடையே, வேளச்சேரி -பரங்கிமலை இடையே உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் போதிய பொது போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து புழுதிவாக்கம் அடுத்த ஏஜிஎஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் கீதா கணேஷ் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் இருந்து சைதாப்பேட்டை, கிண்டி வழியாக தி.நகர் செல்ல ஒருசில பேருந்துகள் மட்டுமே உள்ளன. தாம்பரம், மயிலாப்பூர், சென்ட்ரல் போன்ற இடங்களுக்கு பேருந்து வசதி இல்லை. பேருந்து, மின்சாரரயில் என மாறிச் செல்ல வேண்டும். பரங்கிமலையில் இருந்து மெட்ரோ, மின்சார ரயில் சேவை என அனைத்து சேவைகளும் உள்ளன. எனவே, எஞ்சிய பணிகளை விரைவில் முடித்து, வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டும்’’ என்றார்.
ரூ.30 கோடி தேவை: இதுபற்றி தெற்கு ரயில்வே ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘‘வேளச்சேரியில் இருந்துஆதம்பாக்கம் வரை 5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டம் ரூ.495 கோடியில் தொடங்கப்பட்டது. பின்னர், திட்ட மதிப்பீடு உயர்ந்து,ரூ.730 கோடியில் பணி நடைபெறுகிறது.
தற்போது அரை கி.மீ. தூரத்துக்கான பணிகளை மேற்கொள்ள ரூ.30 கோடி தேவை. பரங்கிமலையில் இந்த பறக்கும் ரயில் பாதை, சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் மின்சார ரயில் பாதையின் மேல் அமையும். இப்பணி 2023 மார்ச் மாதத்துக்குள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும்’’ என்றனர்.