சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முன்வைத்த கருத்துகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சர் க.பொன்முடி: சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அதிகரித்ததில் அதிமுகவுக்கும் பங்குண்டு. இத்தகைய அதிமுகதான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுவருத்தம் அளிக்கிறது. ஆனால் அவர்களும் சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள் என நம்புகிறோம்.
தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான சட்டவாய்ப்பு இல்லை. வாய்ப்பிருந்தால் தமிழக அரசும் மனு தாக்கல் செய்யும். குறிப்பாக 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு செயல்படுத்தாது.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: 10 சதவீத இடஒதுக்கீட்டிலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. தீர்மானத்தில் காங்கிரஸ் கையெழுத்திடவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: சமூகநீதியை காப்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இருக்கிறோம்.
சட்டப்பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நாகை மாலி: இந்த இடஒதுக்கீட்டை கொள்கைரீதியாக ஆதரித்தாலும் வருமான வரம்பை கடுமையாக எதிர்க்கிறோம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அனைத்து அரசியல் கட்சிகளும் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வர்.
பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு: மூன்றாவது இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில்இருக்கிறோம். இது தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் பாமக ஆதரிக்கும்.
விசிக தலைவர் திருமாவளவன்: பாஜக அல்லாத பிற மாநிலமுதல்வர்களையும் ஒருங்கிணைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மீண்டும் 9 நீதிபதிகள் அமர்வில் 10 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்குமுரணானது என்பதால் நிராகரிக் கிறோம்.
கொமதேக எம்பி, ஏ.கே.பி.சின்ராஜ்: தென்னிந்தியாவில் வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படக் கூடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.