திருப்பூர் அடுத்த மங்களம் அருகே பாயும் நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை இருக்கிறது. இது சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த தடுப்பணை கட்டப்படும் போது நடுவில் உடைந்து கொண்டே இருந்தது. இதையொட்டி நல்லம்மன் என்ற சிறுமி அங்கு உயிர்த்தியாகம் செய்தார். அதன்பிறகே அணை உடையாமல் இருந்தது. எனவே நல்லம்மனுக்கு அணையின் நடுவே கோயில் கட்டி வழிபட்டு வருவதாக வரலாறு கூறுகிறது.
இந்த அணை ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாள்தோறும் நல்லம்மனுக்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நல்லம்மன் தடுப்பணையில் தடுக்கப்படும் தண்ணீரானது, ராஜவாய்க்கால் மூலமாக சின்ன ஆண்டிபாளையம் குளத்திற்கு செல்கிறது. இதனை பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வழக்கமாக தண்ணீரின்றி வறண்டு காணப்படும் இந்த தடுப்பணையில், தற்போது அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது. இதன் காரணமாக நல்லம்மன் கோயிலுக்கு செல்லும் சிறு பாலத்தின் ஒருபகுதி உடைந்துவிட்டது.
இது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் கோயிலுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நல்லம்மன் கோயிலும் முழுமையாக மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் உடுமலை அருகே அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணை நீர்மட்டம் 88 அடியை எட்டியது.
உபரி நீர் 5 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் முழு கொள்ளளவான 90 அடியை அமராவதி அணை எட்டவுள்ளதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் அமராவதியின் துணை ஆறுகளான பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி, குதிரையாறு 3,950 கன அடி, வரதமா நதி 500 கன அடி என அமராவதி ஆற்றில் கொழுமம் மற்றும் அலங்கியம் பகுதியில் ஆற்றில் கலந்ததால் 27,500 கன அடி நீர் தாராபுரம் அருகே பெருக்கெடுத்து ஓடுகிறது.
இன்று காலை நிலவரப்படி அமராவதி அணையின் நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 87.37 அடியாக இருக்கிறது. அணைக்கு நீர் வரத்து 6,272 கன அடியாகவும், உபரி நீர் வெளியேற்றம் 6,832 கன அடியாகவும், நீர் இருப்பு 3.80 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இரண்டாவது நாளாக அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.