புதுடெல்லி: கரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டால் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி, உலகையே பதம் பார்த்தது கரோனா வைரஸ் தொற்று. இந்தியா உட்பட சில நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தியதால் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும், ஒரு முறை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பலர் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்படி 2-வது முறை தொற்று ஏற்படுவதை மறுதொற்று என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்படுவதை’ தடுப்பை உடைத்த தொற்று’ என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், மறு தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு ஆபத்துஅதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை ‘நேச்சர் மெடிசின்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அமெரிக்க தேசிய சுகாதார புள்ளிவிவரங்களின் தரவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டால் சிக்கல் நீடிக்குமா என்றால், ஆம் என்றுதான் மருத்துவர்கள் பதில் அளிக்கின்றனர். மற்ற தொற்றுகளை விட கரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்படும். இந்த நிலை அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டால் நுரையீரல், இதய, ரத்தக் கசிவு, நீரிழிவு, இரைப்பை குடல், சிறுநீரகம், மனநலம், தசைக் கூட்டு மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மொத்தம் 58.2 லட்சம் மூத்த குடிமக்களிடம் ஆய்வு நடத்தப் பட்டுள்ளது. அவர்களில் 53.3 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 4,43,588 பேருக்கு கரோனா தொற்று ஒரு முறை ஏற்பட்டுள்ளது. 40,947 பேருக்கு மறு தொற்று ஏற்பட்டுள்ளது. மறு தொற்று ஏற்படாதவர்களை ஒப்பிடும் போது, மறு தொற்றுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து நீடிப்பது தெரிய வந்துள்ளது.
கரோனா தொற்று நீடிப்பதால் ஒற்றை தலைவலி, வலிப்பு, நினைவிழப்பு, பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.