மெல்பர்னில் பிரம்மாண்டமாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. ஏற்கனவே 2010 இல் டி20 உலகக்கோப்பையை வென்றிருக்கும் இங்கிலாந்து இரண்டாவது முறையாக கோப்பையைத் தட்டித் தூக்கியிருக்கிறது.
மழை மேகங்கள் சூழ மெல்பர்னில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பட்லரே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. கொஞ்சம் சுமாரான ஸ்கோர்தான். அரையிறுதியில் அடித்து வெளுத்த பாபர் அசாமும் ரிஸ்வானும் இங்கே பெரிதாக பெர்ஃபார்ம் செய்யவில்லை. ரிஸ்வான் பவர்ப்ளேக்குள்ளேயே சாம் கரனின் பந்தில் போல்டாகினார். பாபர் அசாம் கொஞ்சம் நேரம் நின்று அடில் ரஷீத்தின் கூக்ளி ஒன்றில் அவரிடமே கேட்ச் ஆனார். இவர்களுக்கு பிறகு ஷான் மசூத்தும் ஷதாப் கானும் குறிப்பிடத்தக்க வகையில் கொஞ்சம் ரன்களை சேர்த்தனர். அதனால் மட்டுமே பாகிஸ்தான் அணி கொஞ்சம் சவாலளிக்கும் வகையில் 137 ரன்களை எட்டியது.
சாம் கரனும் அடில் ரஷீத்தும் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக பந்துவீசியிருந்தனர்.
இங்கிலாந்து அணி சேஸிங்கைத் தொடங்கியது. தங்களின் வழக்கமான அட்டாக்கிங் முறையிலேயே ஆட்டத்தைத் தொடங்கினர். ஆயினும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தை அத்தனை எளிதில் ஸ்கோர் செய்யவிடவில்லை. பவர்ப்ளேக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே ஹேல்ஸை ஷாகீன் ஷா வீழ்த்தினார். பட்லரையும் சால்ட்டையும் ஹரீஸ் ராஃப் வீழ்த்தினார். போட்டி தொடர்ந்து நெருக்கமாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால், இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் மட்டும் விக்கெட்டை விடாமல் நிலைத்து நின்று ஆடுவதில் குறியாக இருந்தார். நசீம் ஷா வீசிய பந்துகளிலெல்லாம் ஸ்டோக்ச் தொடர்ந்து பீட்டன் ஆகிக்கொண்டே இருந்தார். ஆயினும் பொறுமை இழக்காமல் சரியான நேரத்திற்காக காத்திருந்தார். 16 வது ஓவரில் முதல் பந்தை வீசியதோடு ஷாகீன் ஷா காயம் காரணமாக வெளியேறினார். அடுத்த 5 பந்துகளை இஃப்திகார் வீசினார். இதுதான் சரியான சமயம் என ஸ்டோக்ஸ் விஸ்வரூபம் எடுத்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்து வேகமெடுத்தார். அடுத்தடுத்த ஓவர்களில் மொயீன் அலியும் வேகமாக ஆட இங்கிலாந்து அணி 19 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை எடுத்து மேட்ச் வின்னராக மிளிர்ந்தார். 2016 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணமாக இருந்த ஸ்டோக்ஸ் இப்போது அதற்கு ஈடாக ஒரு டி20 உலகக்கோப்பையையே வென்று கொடுத்துவிட்டார்.
பாகிஸ்தானின் 92 Once again கனவு தகர்ந்திருக்கிறது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அணி கடைசி வரைக்குமே துடிப்பு குறையாமல் வெற்றிக்காக போராடினர். அதற்காக பாராட்டலாம். இப்போது ஓடிஐ உலகக்கோப்பையும் இங்கிலாந்திடமே இருக்கிறது. டி20 உலகக்கோப்பையும் இங்கிலாந்திடமே இருக்கிறது.