நீலகிரியில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வனவிலங்குகள் வருவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. கரடி, யானை ஆகியவை சமீப காலங்களில் அதிகமாக ஊருக்குள் வருவதாக கூறப்படுகின்றன. வனத்துறையினரும் வனவிலங்குகள் மற்றும் மக்கள் மோதலை தவிர்க்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும், முழுமையாக கட்டுபடுத்த முடியவில்லை.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவை மாவட்டத்திற்கு செல்லும் மூன்றாவது மாற்றுப்பாதையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்து நேற்று இரவு பயணிகளுடன் மஞ்சூரில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவைக்கு சென்றுள்ளது. அப்போது கெத்தை மலைப்பாதையில் குட்டியுடன் தாய் யானை ஒன்று சாலையை வழிமறித்து நின்றது.
நீலகிரி – கோவை மலைப்பாதையில் கடையை போட்ட யானை கூட்டம்… வழிமேல் விழிவைத்து காத்திருந்த பேருந்து பயணிகள்!#Nilgiris | #ViralVideo | #Elephants pic.twitter.com/ErAsJdPAvz
— NG Sudharsan07 (@NgSudharsan07) November 13, 2022
அப்போது அரசு பேருந்து அப்பகுதிக்கு வந்த போது, பேருந்தை பார்த்தவுடன் வழிவிடாமல் அந்த யானை நின்றது. சற்றுநேரத்தில் யானைகள் சாலை கடந்து, நடந்து சென்றன. அதேபோல், இன்று காலையும் குட்டியுடன் இருந்த காட்டு யானை கூட்டம் ஒன்று, அரசு பேருந்தை வழிமறித்து நின்றன. இதனால் பயணிகள் பெரும் அச்சமடைந்தனர்.
நீண்ட நேரமாகியும் யானைகள் சாலையைவிட்டு செல்லவில்லை. இதனால், பேருந்து அப்படியே நிறுத்திவைக்கப்பட்டது. யானை கூட்டம் சாலையை கடக்கும் வரை பொறுமையாக இருந்தனர். ஏறத்தாழ அரைமணி நேரத்திற்கு பின், யானை அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகே, பேருந்து இயக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், பேருந்து கோவைக்கு புறப்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த ஒருவர் யானைகள் சாலையை மறித்து நிற்பதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். யானைகளை தொந்தரவு செய்யாமல் அரைமணி நேரமானாலும் காத்திருந்த பேருந்து ஓட்டுநரையும், பயணிகளையையும் இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.