கரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து விவசாயிகளின் தோட்டங்களில் 1000 வருடப் பழைமையான சிவலிங்கங்கள், நந்தி, சண்டிகேஸ்வரர் சிலைகள் கிடைத்து வருவது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி செல்லும்வழியில் உள்ள மலைக்கோவிலூர் அருகிலுள்ள அரசம்பாளையத்தில் இருக்கும் ஒரு விவசாயியின் முருங்கைத் தோட்டத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருந்த தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த சிவனடியார்கள், மூடியிருந்த மணல்மேட்டை அப்புறப்படுத்தினர். அப்போது, அவர்கள் அதிசயிக்கும் வகையில் 7 அடி உயர சிவலிங்கமும், நந்தி சிலையும் அவர்கள் பார்வைக்குக் கிடைத்தன. உடனடியாக, அதற்கு பூஜை செய்த சிவனடியார்கள், அந்த சிலைகள் 1,000 வருடம் பழைமையானவை என்று தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த சிவலிங்கத்தை நூற்றுக்கணக்காக பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், அடுத்து கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் உள்ள நஞ்சைக்காலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் பழைய சிற்பங்கள் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரும், ஆசிரியருமான த.சிவசங்கர், வரலாற்று ஆர்வலர்களான ஜெகதினேஷ், கரூர் சுப்ரமணியன், தரகம்பட்டி சிவநாயனார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு 4.4 அடி உயர சிவலிங்கமும், நந்தி சிலையும், சண்டிகேஸ்வரர் சிலையும் கிடைத்தன.
இந்நிலையில், இதுபற்றிப் பேசிய அவர்கள்,
“இந்தப் பகுதி கி.பி 950 வரை பல்லவப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. பல்லவ மன்னர்கள் பெரும்பாலோனர் தீவிர சைவ பக்தர்களாக இருந்துள்ளனர். அமராவதி ஆற்றங்கரையின் இரு புறமும் சிவனுக்குக் கோயிலை எழுப்பி, அவர்களின் பக்தியை வெளிப்படுத்தினர். கட்டிய கோயில்கள் அனைத்தையும் கற்றளிகளாகக் கட்டினர். அழகான சிற்பங்களையும் செதுக்கினர்.
இங்கு ஆவுடையுடன் கூடிய லிங்கம், சண்டிகேஸ்வரர், நந்தி ஆகிய சிற்பங்கள் மட்டும் கிடைத்துள்ளன. சண்டிகேஸ்வரர் சிற்பம் புடைப்பு சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீட மகுடமும், இரண்டு காதுகளிலும் மகர குண்டலங்களும், கழுத்தில் ஆபரணங்களும், மார்பில் முப்புரி நூலும் காணப்படுகின்றன. இந்தச் சிற்பத்தின் வலதுகையில் மழுவோடும், இடது கையை ஊறு ஹஸ்தத்திலும் வைத்துள்ளார். இந்த சிற்பம், 2 1/2 அடி உயரம், 1 1/2 அடி அகலத்தில் இருக்கிறது. சிவலிங்கம் 4.4 அடி உயரத்திலும், நந்தி 2 3/4 அடிகளிலும் அழகாய் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு மிகப்பெரிய சிவன் கோயில் இருந்திருக்கலாம், கால ஓட்டத்தில் அது அழிந்திருக்கலாம்.
இன்னும் நிறைய சிற்பங்கள் காணாமல் போய்விட்டன. கல்வெட்டுகள் எதுவும் கிடைக்காததால், இக்கோயில் எந்த அரசரின் காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. ஆனால், சிற்பத்தின் அமைவை வைத்துப் பார்க்கும் பொழுது, இது கண்டிப்பாக பல்லவர்களின் சிற்பக்கலை என உறுதியாகச் சொல்லலாம். மேலும், இப்பகுதியில் ஆய்வு செய்தால் இதுபோன்ற பல வரலாற்று ஆன்மிக விஷயங்கள் இன்னும் வெளிப்படும்.
கரூர், திருச்சி மற்றும் கோவை மாவட்ட சிவனடியார்கள் சார்பில் திருப்பணி பீடம் கட்டப்பட்டு, மூன்று சிற்பங்களும் நிறுவப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இவற்றைத் தொடர்ந்து, இந்த சிவலிங்கம் மக்கள் வழிபாட்டு முறைக்கு விடப்படும். அமராவதி ஆற்றங்கரைகளில் ஆய்வு செய்தால், இங்கே புதைந்திருக்கும் பல வரலாற்று, ஆன்மிக உண்மைகளை வெளிக்கொணரமுடியும்” என்றார்கள்.