சின்னத்திரை, வெள்ளித்திரை என பலருக்கும் அறிமுகமான முகம் ஹரிஷ் ஆதித்யா. நடிகராக நம்மிடையே அறிமுகமானவர் தற்போது இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `காற்றுக்கென்ன வேலி’ தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறார். `அப்போ இப்போ’ தொடருக்காக அவரைச் சந்தித்தோம்.
“ சின்ன வயசிலிருந்தே குறும்புத்தனம் கொஞ்சம் அதிகம். அதனால வெளியூரில் ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வச்சாங்க. அங்கேயும் சேட்டை பண்ணி கடைசியா வீட்டிலிருந்தே ஒழுங்கா படிக்கிறேன்னு சொல்லி எங்க ஊரிலேயே ஃபார்மஸி படிச்சேன். தாத்தா என் எஸ் கிருஷ்ணன் மூலமாகவா எப்படின்னுலாம் தெரியாது ஆனா எனக்கும் நடிப்புல ஆர்வம் இருந்துச்சு. சின்ன வயசுல ஸ்டேஜ் டிராமா எல்லாம் பண்ணியிருக்கேன். ஃபார்மஸி முடிச்சதும் சினிமாவில் டிரை பண்ணலாம்னு எண்ணம் அப்பவே இருந்தது.
படிப்பு முடிஞ்சதும் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் வேலை கிடைச்சது. அங்க வேலை பார்த்துட்டே சினிமாவுக்கும் டிரை பண்ணிட்டு இருந்தேன். சங்கையான்னு ஒரு ஏஜென்ட் ஒருத்தர் என் ஃபோட்டோ கேட்டாரு. அவர் ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்றதாகவும் சொல்லியிருந்தார். அப்படித்தான் ஒருநாள் பாலா சாருடைய `நந்தா’ படத்துல நடிக்கிறதுக்கு காலேஜ் படிக்கிற பசங்க மாதிரி ஆள் தேவைன்னு சொல்லி டிரை பண்ணச் சொன்னாங்க. அங்க ஆடிஷனுக்கு போயிருந்தேன். கூட்டமா நிற்கிறதுக்குத்தானே அதனால ஓகேவும் ஆகிடுச்சு. அந்த சமயம் வேலை பார்த்துட்டே நடிச்சிட்டு இருந்ததால மேனேஜர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு மதுரைக்கு ஷூட்டிங்கிற்காக போனேன்.
கேமரா.. ஸ்டார்ட்… சொன்னதும் எல்லாரும் நடந்து போவாங்க அப்படியொரு சீன் எடுத்தாங்க. நான் மட்டும் கூட்டத்தோட கூட்டமா நடக்காம கேமரா முன்னாடி நின்னுட்டு இருந்தேன். இதை பாலா சார் பார்த்துட்டே இருந்துருக்கார். அத்தனை கூட்டத்தில் என்னை கை காட்டி இங்க வான்னு கூப்பிட்டார். கிட்டத்தட்ட 500 பேர் கூட்டத்துல அவர் என்னை கை காட்டவும் அங்க இருந்த எல்லாருக்கும் ஷாக்! எனக்கும் தாங்க!
ஸ்டில் ஃபோட்டோகிராபர் சுகுமார் சாரை கூப்பிட்டு என்னை ஃபோட்டோ எடுக்கச் சொன்னார். அத்தனை பேர் முன்னாடியும் ஃபோட்டோ எடுத்தார். அப்படித்தான் அந்தப் படத்தில் நடிச்சேன். படம் ரிலீஸூக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த சமயம் சேது பட கம்பெனியில் இருந்து நான் வேலை பார்த்த இடத்துக்கு ஃபோன் பண்ணியிருக்காங்க. அவரை எங்க ஆபிஸூக்கு வந்து பார்க்கச் சொல்லுங்கன்னு சொன்னதாக என்கிட்ட தகவல் சொன்னாங்க. அங்க போன பிறகு, `கும்மாளம்’னு ஒரு படம்… 4 ஹீரோ சப்ஜெக்ட். அதுல நீங்க ஒரு ஹீரோவாக பண்றீங்கன்னு சொல்லி ஃபோட்டோஷூட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. காயத்ரி ரகுராம் மாஸ்டர் தான் எனக்கு ஜோடி. அந்தப் படத்துல திடீர் திடீர்னு ஒவ்வொருத்தரா தூக்கினாங்க. சரி, கண்டிப்பா நம்மளையும் மாத்திடுவாங்கன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, அந்தக் கேரக்டர் நான் தான் பண்ணனும்னு அவங்க முதலிலேயே முடிவு பண்ணிட்டாங்க போல என்னை கடைசி வரைக்கும் மாத்தல. அடுத்ததாக, `திருடா திருடி’ படம் பண்ணினேன். அந்தப் படத்துல கருணாஸ் ரோல் நான்தான் பண்றதா இருந்தது. அப்ப, தனுஷ் சாரும் புதுசுங்கிறதனால ரெண்டு பேரும் புதுசா இருந்தா செட்டாகாதுன்னு சொல்லி கருணாஸ் எனக்கு பதிலா நடிச்சார்.
வாய்ப்பிற்காக பல இடங்கள் ஏறி, இறங்கியிருக்கேன். சில இடங்களில் அவமானப்படுத்தி கூட அனுப்பியிருக்காங்க. ஒவ்வொரு முறையும் இப்படி அவமானங்களோடுதான் வாய்ப்பு தேடிட்டு இருந்தேன். ஒருகட்டத்துக்கு மேல, என்எஸ்கே பேரன் வாய்ப்புக் கேட்டு தெருத்தெருவா அலையுறான்னு சொல்லிட்டாங்க.
அவருக்கு என்னால பெருமையைத் தேடித்தர முடியலைன்னாலும் அவர் பெயரை அசிங்கப்படுத்தக் கூடாதுன்னு தோணுச்சு. அதனால, சினிமாவில் வாய்ப்புத் தேடி அலையுறதை விட்டுட்டேன்.ஒருநாள் `கும்மாளம்’ பட இயக்குனர் மூர்த்தி என்ன பண்றன்னு கேட்டார். படம் ஹிட் ஆகியிருந்தா படமாச்சும் நடிச்சிட்டு இருந்திருப்பேன்னு கிண்டலாக சொல்லவும் `அப்பா’ன்னு ஒரு சீரியல் பண்ணப் போறேன்.. அதுல நடிக்கிறியான்னு கேட்டார். எனக்கு சீரியலெல்லாம் எதுக்கு வேண்டாம்னுதான் சொன்னேன். அவர் சொன்னதால அந்த சீரியலில் நடிச்சேன். அது விகடன் தயாரிப்பில் வெளியான சீரியல். வழக்கம்போல ஷூட்டிங் போயிருந்தேன். திடீர்னு இன்னைக்கு சீனுக்கு நீங்க மொட்டை போட்டுக்கணும்னு சொல்லிட்டாங்க. பிறகு என்ன பண்றது குருநாதர் ஆச்சே… மொட்டை போட்டு அந்த சீரியல் பண்ணினேன். நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு.
சீரியல் புராஜெக்ட் முடிஞ்சதும் எல்லாரும் நல்லா நடிச்சிருக்கேன்னு சொன்னாங்க, மரியாதை கிடைச்சது. ஆனா, வாய்ப்பு கிடைக்கல. சினிமாவில் பெரிய சம்பாத்தியம் எதுவுமில்லை. ஆனா, சினிமாவும் என்னை கைவிடலை! அதே விகடன் புரொடக்ஷனில் `பிரியமானவள்’ சீரியல் பண்ணினேன். அது நல்ல பிரேக்காக இருந்துச்சு. கவிதாலயா புரொடக்ஷனில் `தேன்மொழியாள்’னு ஒரு சீரியல் பண்ணினேன். பாலச்சந்தர் சாரை பார்க்கணும்னு பலமுறை அவருடைய ஆபிஸில் தவம் இருந்திருக்கேன். ஆனா, அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கலை. சமுத்திரக்கனி சார் `அரசி’ன்னு ஒரு சீரியல் டைரக்ட் பண்ணிட்டு இருந்த சமயம் திடீர்னு போன் பண்ணி பாலச்சந்தர் சார் உன்னை பார்க்கணும்னு சொல்றார்னு சொல்லி அவரை நேரில் சந்திக்கச் சொன்னார். சாரைப் பார்த்ததும் உடம்பு சிலிர்த்து ஒருமாதிரி ஆகிடுச்சு. `தேன்மொழியாள்’ சீரியலில் நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்லி என்னைப் பிடிச்சு என் நெற்றியில் முத்தம் கொடுத்தார். அந்த முத்தத்தை என் வாழ்நாள் முழுக்கவும் மறக்க முடியாது! `அரசி’ ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கே போய் கனி சாரை சந்திச்சு அவர் காலில் விழுந்து அவர்கிட்டேயும் அழுது நன்றி சொன்னேன். இப்படியான ஒரு வாய்ப்பை எனக்கு அவர் தானே கொடுத்தார்! அசிஸ்டன்ட் டைரக்டராக `யாரடி நீ மோகினி’ சீரியலில் சேர்ந்தேன். `சுப்பிரமணியபுரம்’ சீரியலை டைரக்ட் பண்ணினேன். தொடர்ந்து, `கல்யாண பரிசு’, ‘ அக்னி நட்சத்திரம்’ பண்ணினேன். கொஞ்ச எபிசோட் ‘திருமகள்’, ‘தாலாட்டு’ ரெண்டும் டைரக்ட் பண்ணினேன். இப்ப `காற்றுக்கென்ன வேலி’ டைரக்ட் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு!’ எனப் புன்னகைத்தார்.
ஹரீஷ் ஆதித்யா இன்னும் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
ஹரிஷ் ஆதித்யா இன்னும் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!