அயோத்தி: அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அயோத்தியில் புதிதாக மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் இடம் வழங்க உத்தரவிட்டது. இதன்படி அயோத்தியின் தன்னிப்பூரில் 5 ஏக்கர் நிலத்தைமாநில அரசு ஒதுக்கி உள்ளது.அங்கு மசூதி கட்ட உ.பி. சன்னிவக்பு வாரியம் சார்பில் இந்தியஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறக்கட்டளை நிர்வாகி கள் மசூதி கட்டுவதற்காக பொது மக்களிடம் நிதி வசூல் செய்து வருகின்றனர். இந்த சூழலில் இந்திய இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் செயலாளர் அக்தர் ஹூசைன் கூறியதாவது:
ஐந்து ஏக்கர் நிலத்தில் மசூதி, மருத்துவமனை, அன்னதான கூடம், இஸ்லாமிய ஆய்வுக் கழகம் ஆகியவற்றை கட்ட முடிவு செய்துள்ளோம். புதிய மசூதியில் ஒரே நேரத்தில் 2,000 பேர் தொழுகை நடத்த முடியும். அதோடு 100 படுக்கை வசதிகளுடன்கூடிய மருத்துவமனையை கட்ட உள்ளோம்.
நாள்தோறும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் வகை யில் அன்னதான கூடத்தையும் கட்ட உள்ளோம். நூலகத்துடன் கூடிய இஸ்லாமிய ஆய்வுக் கூடத்தையும் அமைக்க உள்ளோம்.
அனைத்து அனுமதிகளையும் பெற்று விட்டோம். ஆனால் மசூதி கட்டப்படும் இடத்துக்கு செல்ல 12 மீட்டர் அகலம் கொண்டசாலை வசதி அவசியம். தற்போதுள்ள குறுகிய சாலை காரணமாக தீயணைப்புத் துறையின் அனுமதி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. சாலையை விரிவுபடுத்தக் கோரி அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.
அதோடு மசூதி கட்டப்பட உள்ள இடம் விவசாய நிலம்என்பதால் அதன் நில வகைப்பாட்டையும் மாற்ற கோரியுள்ளோம். சாலை அகலப்படுத்தப்பட்டு நில வகைப்பாட்டையும் மாற்ற அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
அனைத்து அனுமதிகளையும் பெற்று விரைவில் கட்டுமானப் பணியை தொடங்குவோம். அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.