கன்னியாகுமரி: இந்தோனேஷியா சிறையில் கன்னியாகுமரி மீனவர் உயிரிழந்த வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி தூத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெசின்ராஜ் உள்பட 4 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி இந்தோனேஷியா கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் ஜெசின்ராஜ் என்பவர் கடந்த மே 22-ம் தேதி சிறையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் விமான மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் உடற்கூராய்வு சோதனை அறிக்கையில் ஜெசின்ராஜ் உடலில் பல காயங்கள் இருந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள மீனவர்கள் சிறையில் உள்ள எஞ்சிய 3 பேரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.