இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று (ஞாயிறு) நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்த நிலையில் வெடிகுண்டு வைத்ததாக இன்று (திங்கள்) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இஸ்தான்புலின் இஸ்டிக்லால் அவென்யூவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில்6 பேர் உயிரிழ்ந்தனர். 81 பேர் காயமடைந்தனர்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரம் பிரபலமான சுற்றுலா தலம். இநிலையில் இங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள அதிபர் எர்டோகன் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், நிகழ்விடத்தில் குண்டு வைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக நேற்று சம்பவ இடத்துக்கு அருகே இருந்து பத்திரிகையாளர் அலி முஸ்தபா வெளியிட்ட வீடியோ ஒன்றில், “எனக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. நான் உடனடியாக சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்தேன். அப்போது மக்கள் பதற்றத்துடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். போலீஸ் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவித்தனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த தெருவில் வெளிநாட்டு தூதரகங்கள் இருக்கின்றன. அதனால் இது திட்டமிட்ட சதி தாக்குதல் என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது” என்று கூறினார்.