ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அம்மாபேட்டை அருகே பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மாணவர், சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குதிரைக்கல் மேடு பகுதியைச் சேர்ந்த மாதையன் – தங்கமணி தம்பதியர். இவர்களது 13 வயது மகன் திவாகர். இவர் பூதப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை குதிரைக்கல் மேடு பேருந்து நிலையத்தில் இருந்து திவாகரன் பள்ளி பேருந்தில் ஏறியுள்ளார்.
பள்ளி வாகனத்தில் உதவியாளர் இல்லாத நிலையில், பேருந்தின் முன்பகுதியில் உள்ள படிக்கட்டில் நின்றவாறு திவாகர் பயணித்துள்ளார். கோனேரிப்பட்டி அருகே பேருந்து சென்றபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால், நிலைதடுமாறிய சிறுவன் திவாகர், பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். அவர்மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடலைக் கைப்பற்றிய அம்மாபேட்டை போலீஸார், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் உயிரிழப்பைத் தொடர்ந்து தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.