ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த குதிரைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர், மாதையன்- தங்கமணி தம்பதியரின் மூத்த மகன் திவாகர் (13). இவர் பூதப்பாடியில் உள்ள புனித இஞ்ஞாசியார் அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல பள்ளிப் பேருந்தில் திவாகர் ஏறி பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தார். திவாகர் சென்ற பேருந்தில் அவருடன் சேர்த்து 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அதேசமயம், பள்ளி பேருந்தில் உதவியாளர் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. பேருந்தை அம்மாபேட்டையைச் சேர்ந்த ராமராஜ் (34) என்பவர் ஓட்டிச் சென்றார்.
இந்தப் பேருந்து அம்மாபேட்டையை அடுத்த கோனேரிப்பட்டி அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின்மீது மோதாமல் இருப்பதற்காக, ஓட்டுநர் சடன் பிரேக் போட்டதாகத் தெரிகிறது. அப்போது பேருந்தின் படிக்கட்டுக்கு அருகில் நின்றிருந்த திவாகர் இதில் எதிர்பாராதவிதமாக பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்தார்.
விழுந்த வேகத்தில் பள்ளிப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஏணிப்படி வழியாகவே மாணவர்கள் ஏறி, இறங்குகின்றனர். இந்த வாகனத்துக்கு கதவு இருந்தும், அது சரிவர இயங்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக, படிக்கு அருகே நின்றுச் சென்ற மாணவர் திவாகர் பிடிமானம் இல்லாததால் பேருந்திலிருந்து தவறி விழுந்ததாக உடன் சென்ற மாணவர்கள் கூறியாதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து விளக்கம் கேட்பதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பல முறை தொடர்பு கொண்டும் அவர் தொலைபேசியை எடு்க்கவில்லை. இந்த நிலையில், விபத்துக்கு காரணமான ஓட்டுநர் ராமராஜை, அம்மாபேட்டை போலீஸார் கைதுசெய்து, மாணவரின் சடலத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் பள்ளி மாணவர் பலி!
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த காசிபாளையம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி வேல்முருகன் மகன் கவினேஷ் (14). இவர் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் கவினேஷ் காத்திருந்தார். அப்போது, ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சேலம் மாவட்டம், ஆத்தூரை நோக்கி ஈரோடு சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையை கடக்க முயன்றது. இதனால், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் டிரைவர் சதீஷ் சடன் பிரேக் போட்டார்.
திடீர் பிரேக் போட்டதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவன் கவினேஷ் மீது மோகி கவிழ்ந்தத.
இந்த விபத்தில் கவினேஷ் வேனுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் வேனில் இருந்த கல்லூரி மாணவர்களும், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கணபதிபாளையத்தைச் சேர்ந்த குருசாமி உட்பட 7 பேர் படுகாயமடைந்து, கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.