கடலூர்: வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
வடகிழக்குப் பருவமழையால் அதிகமாக பாதிக்கப்படும் மாவட்டங்களில் கடலூரும் ஒன்று. இந்தாண்டு பருவமழையின் தொடக்கத்திலேயே அதிக மழைப்பொழிவின் காரணமாக இம்மாவட்டம் அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிஞ்சிப்பாடி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.14) கடலூர் வந்தார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட கீழ்பவானிகுப்பத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகைக்கான காசோலை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர், தண்ணீர் சூழ்ந்த விளை நிலங்களை முதல்வர் பார்வையிட்டார்.
பின்னர், கடலூர் மாவட்டத்தில் வீடுகள் எந்தெந்த பகுதிகளில் சேதமடைந்துள்ளன, சாலைகளில் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது, என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.