கனிம கொள்ளையை தடுக்காவிட்டால் போராட்டம்: அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றுதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஆற்று மணல், கடல் மணல், மலைகள், பாறைகள்என பல கனிம வளங்கள் கொள்ளையடிப்பட்டு, அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. முறையான அனுமதி பெறாமல், மலைகளையும், பாறைகளையும், குன்றுகளையும் குடைந்து கல் குவாரி அமைத்து, தமிழகத்தின் கனிம வளத்தை கொள்ளையடிப்பது எல்லை மீறிப் போகிறது.

மக்கள் மீது தாக்குதல்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கொரட்டகிரி கிராம மக்கள், கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து, கிராமத்தைவிட்டே வெளியேறி, லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், காவல் துறையினரோ போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். கிராமத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை என்று கூறிய மக்கள், நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் சரத்குமார், 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பிவைத்துள்ளார். ஆனால், கனிமவளக் கொள்ளை நிற்கவில்லை. இதனால், கிராம மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு, வனப் பகுதியில் தற்காலிகமாக டென்ட் அமைத்து தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் உதவிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜகவினர் செய்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் குறித்த சிந்தனை: அண்டை மாநிலங்கள், தங்கள் ஆறுகளையும், மலைகளையும், கனிம வளங்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் குறித்த சிந்தனை இல்லாமல், தமிழகத்தில் தொடர்ந்துகனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவற்றை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. எனவே, தமிழக அரசு கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்தி, கொரட்டகிரி மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்பும் வகையில் உடனடியாக நடவடிக்கை வேண்டும்.இல்லாவிட்டால், பாஜக சார்பில்போராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.