தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்திய காதலியை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து நகர் முழுவதும் எறிந்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில் உள்ள கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த ஜோடி டெல்லிக்கு சென்று, மெஹ்ராலி பகுதியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில், காதலி ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்தாப்பை அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் அப்தாப், ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், ரம்பத்தை கொண்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஒரு பெரிய பிரிட்ஜ் வாங்கி அதில் உடல் துண்டுகளை வைத்து டெல்லி முழுவதும் அவற்றை ஒவ்வொன்றாக தூக்கி எறிந்துள்ளார்.
இந்த நிலையில், ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டனர். இதையடுத்து அவரது தந்தை ஷரத்தாவை பார்க்க டெல்லிக்கு வந்தார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால் போலீசில் புகார் செய்தார். போலீசார் ரகசிய தகவலின் பேரில் அப்தாபை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது.