புதுடெல்லி: நாடு முழுவதும் கிராம நீதிமன்றங்கள் அமைக்கும் விவகாரத்தில் அனைத்து உயர்நீதிமன்றங்களும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, இந்திய குடிமகன் யாரும் சமுதாய, பொருளாதார மற்றும் இதர காரணங்களுக்காக நீதி பெறுவதில் தாமதம் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு, அதனை தீர்க்கும் காரணமாக கிராமங்களில் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி பல்வேறு மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல அமைப்பு ஒன்று தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் ஒவ்வொரு உயர் நீதிமன்றங்களும் கண்காணிப்பு அமைப்பு என்பதனால், அவர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அதனால் நாட்டில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.