கொல்கத்தா: ஜனாதிபதியின் தோற்றம் குறித்த அமைச்சரின் கருத்துக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார். மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி நந்திகிராமில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், ‘‘சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்’’ என பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்குரிய இந்த பேச்தை பேசிய அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜ கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் அகில் கிரியின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறுகையில்,‘‘ ஜனாதிபதி முர்முவை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அவர் ஒரு சிறந்த பெண்மணி. அவரை பற்றிய அமைச்சரின் கருத்துக்காக மன்னிப்பு கேட்கிறேன்.அகில் கிரியின் பேச்சு தவறு. அவருடைய பேச்சை கண்டிக்கிறேன்’’ என்றார்.