தமிழ்நாடு – கேரளா பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் 16-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்பட்சத்தில், அது கரையை நோக்கி நகரும்போது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. அது புயலாக வலுப்பெறுமா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது