தலைவர்தான் என்னை கவனித்துக் கொள்கிறார்: ரஜினி உதவியாளர் அறிக்கை
ரஜினிகாந்தின் தனிப்பட்ட உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் சுதாகர். ரசிகர் மன்ற பொறுப்பாளராகவும் இருந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவ செலவிற்காக நண்பர்கள், உறவினர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. ரஜினிகாந்தின் உதவியாளருக்காக பணம் வசூலிக்கப்படுகிறதா? ரஜினி உதவி செய்யவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைவர் ரஜினிகாந்தின் அபிரிமிதமான நன்மதிப்பை குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்யான பிரச்சாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரக புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவ செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போதுவரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார். அதற்காக எங்கள் முழு குடும்பமும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.
எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல் அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்க தொடங்கினார்கள். தலைவர் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது தலைவரின் நல்லெண்ணத்தையும், குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.