சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் ‘குழந்தைகள் தினமாக’ மத்திய, மாநில அரசுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்: “குழந்தைகள் தான் பல தருணங்களில் நமக்கு பெற்றோர்கள். அவர்கள் தான் மகிழ்ச்சியின் ஊற்றுகள். அவர்களின் தழுவல்கள் தான் நமது மனக்காயங்களை போக்கும் மருந்துகள். என்னைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் நானே குழந்தையாகி விடுவேன். அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும் கொண்டாடுவோம்” என்று வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்:“குழந்தைகள் மீது பேரன்பு காட்டிய பெருந்தகை ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாள். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். கள்ளங்கபடமற்ற உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். இன்றும், என்றும் அவர்களை போற்றுவதுடன், அவர்களைப் போல உளத்தூய்மையுடனும், கவலையின்றியும் வாழ முயல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்: “நம்பிக்கை நட்சத்திரங்களாம் குழந்தைச் செல்வங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்… என்ற மொழிக்கேற்ப குழந்தைகளை எல்லா நாளும் கொண்டாடி மகிழ்வோம்.
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி எல்லாக் குழந்தைகளும் சமவாய்ப்புகளோடு வளர்வதற்கும், அதன்வழியாக நாட்டின் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்குவதற்கும் உழைத்திட குழந்தைகள் நாளில் உறுதியேற்றிடுவோம்” என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.