“பல விபத்துகளைத் தாண்டிதான் சினிமாவுக்கே வந்தேன்!" – `புதிய பாதை' பார்த்திபன் @ 1989

ஒரு சினிமா நிஜமான கதை!

பொறந்ததுலேருந்து ஒரு குழந்தை படுத்து. புரண்டு, குப்புற விழுந்து நெத்தியில அடிபட்டு, சுவத்தைப் புடிச்சு எழுந்து, ரெண்டு கையையும் விட்டுட்டு, எந்தப் புடிப்புமே இல்லாம சுத்தியிருக்கறவங்களை மிரண்டு மிரண்டு பாக்குமே… அந்த மாதிரியான மனநிலையிலதான் இப்போ நான் இருக்கேன்.

இது ஒண்ணும் ஒரு பெரிய சாதனையாளனோட ஃபிளாஷ்பேக் இல்லை! ‘திரும்பிப் பார்க்கிறேன்’ – `பின்னோக்கிச் செல்கிறேன்’ – மாதிரியான பெரிய விஷயமும் இல்லை. ஆனாலும் இதை நான் சொல்ல ஆசைப் படறத்துக்கு ஒரு காரணம் இருக்கு.

`பரீட்சையில் தோல்வி – மனமுடைந்து மாணவர் தற்கொலை’, `வேலை கிடைக்காததால் விஷம் குடித்து வாலிபர் சாவு’ – இப்படித் தினம் தினம் பத்திரிகைகளில் நியூஸ் வருது. இதைப் படிக்கும்போதெல்லாம் எனக்குப் பயம் கலந்த சிரிப்புதான் வரும். ஏன்னா, இந்த மாதிரி சின்னச் சின்ன தோல்விக்கெல்லாம் நானும் துவண்டு போய்த் தற்கொலை பண்ணிக்க முடிவு செஞ்சது, இதுவரைக்கும் குறைஞ்சது நூறு தடவையாவது இருக்கும்! அவ்வளவு தடவை நான் மனமுடைந்தும், மீண்டும் முயற்சி செஞ்சதனால நான் இப்போ என்னுடைய சினிமா கனவு சின்னதாவாவது பலிச்சிருக்கு.

பார்த்திபன்

இன்னைக்கு `புதிய பாதை’ எல்லா இடத்திலயும் நல்லா ஓடுதுங்கறது கரண்ட் நியூஸ். ஆனா, நான் சொல்லப் போறது பத்து வருஷங்களுக்கு முன்னால என் வாழ்க்கையில நடந்த ஒரு கரண்ட் நியூஸ்.

ராயப்பேட்டையில நாங்க குடியிருந்த பி அண்ட் டி காலனியில எங்க பில்டிங்கில மட்டும் மொத்தம் பதினெட்டு போர்ஷன். அந்தப் பதினெட்டு போர்ஷன்ல எங்க வீடு எதுன்னு பகல்ல கண்டுபிடிக்கறதைவிட ராத்திரியில கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம். எப்படின்னா, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல எல்லா வீட்லயும் விளக்கெரியும் போது எங்க வீடு மட்டும் பளிச்சுனு இருட்டா தெரியும். ஒவ்வொரு மாசமும் கரண்ட் பில் கட்டறத்துக்குக் கடைசி நாள் 7-ம் தேதி. ஆனா. எங்க அப்பாவுக்கு சம்பளம் 1-ம் தேதி, `ஒண்ணாந்தேதி வாங்கற சம்பளம் ஒண்ணாந் தேதிக்கு மட்டும்தான்’ங்கிறது அவரோட நினைப்பு! பொதுவா, `இன்று ரொக்கம், நாளை கடன்’னு சொல்லுவாங்க. எங்களைப் பொறுத்தவரைக்கும் முதல் தேதி மட்டும்தான் ரொக்கம் மத்த தேதியெல்லாம் கடன்தான். இந்தக் கடன் உபாதைகள்ல மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்டது மளிகைக் கடைக்காரன், பால்காரன், காய்கறிக் கடைக்காரன், அப்புறம்… இந்த கரண்ட் பில்!

எங்கப்பா ஒரு இன்ட்ரஸ்டிங்கான காரெக்டர். வெளியிலேருந்து வீட்டுக்கு வந்தா, வெளியே இருக்கற பிரச்னைகளை மறந்துடுவாரு. அதே மாதிரி வீட்டை விட்டு வெளியே போனா வீட்டுப் பிரச்னையை மறந்துடுவார். அப்படி வீட்டுப் பிரச்னையை அவர் மறந்துடும்போதெல்லாம் எங்கம்மாதான் இதைத் தூக்கி அதில போட்டு, அதைத் தூக்கி இதில போட்டு எப்படியோ சமாளிப்பாங்க. அப்படி அவங்களாலயும் சமாளிக்க முடியாம போறது அந்த கரண்ட் பில் கட்ற விவகாரம்தான்.

இப்படிப்பட்ட இருட்டுத்தனமான வாழ்க்கையிலயும் எப்படியோ நான் ஒரு நாலு எழுத்து (எஸ்.எஸ்.எல்.சி.) பகல்ல படிச்சே பாஸ் பண்ணியிருந்தேன். குடும்பச் சூழ்நிலை எனக்குள்ளே ஏற்படுத்தியிருந்த தாழ்வுமனப்பான்மை காரணமா அந்த காலனி பசங்ககூட சேராம நான் மட்டும் தனியா ஒதுங்கியே இருப்பேன்.

பார்த்திபன்

ஒரு நாள் அந்த காலனி பசங்க எல்லாரும் சேர்ந்து ஒரு நாடகப் போட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணாங்க. நானும் பேர் குடுத்தேன். எல்லாரும் என்னைப் பார்த்து எள்ளி நகையாடினாங்க. ஏன்னா, அப்போ நான் ‘கரு கரு’ன்னு இருப்பேன் (இப்போ மட்டும் என்ன வாழுதாம்?). அப்போ அவங்க சிரிச்ச சிரிப்பு எனக்குள்ளே ஒரு வெறியை உண்டாக்கிடுச்சு!

நான் ஏன் நடிக்கக்கூடாது? நமக்குத் தகுந்த மாதிரி காரெக்டரை நாமளே ஏன் உருவாக்கிக்கக்கூடாது? நமக்கு எழுத வருமா வராதா? இப்படி அடுக்கடுக்கா எனக்கு நானே கேட்டுக்கிட்டி கேள்விகளுக்குப் பதில்தான் – `உண்மை உறங்காது’ங்கற என்னுடைய முதல் நாடகம். சொன்னா நம்பமாட்டீங்க. அந்த நாடகத்துக்கு நான்தான் கதை – திரைக்கதை – வசனம் – டைரக்ஷன் – நடிப்பு – தயாரிப்பு அப்புறம்… இணை இசை (சொன்னா நம்புங்க, இந்த ஜென்மத்தில நான் இசையமைக்கமாட்டேன்). என்னைக் கிண்டல் பண்ணணும்னு அந்த நாடகத்துக்கு வந்தவங்ககூட அவங்களை அறியாம கைதட்டிட்டாங்க. அந்தக் கை தட்டல் சத்தம்தான் என் கவனத்தை வேற எந்தப் பக்கமும் சிதறிப் போக விடாம சினிமாவை நோக்கித் திருப்பி விட்டுருச்சு. அன்னிலேருந்துதான் கலர் கனவுகள் மனசுக்குள்ள காதாடியா பறக்க ஆரம்பிச்சுது. ஆனா, குடும்பச் சூழ்நிலை என்னமோ `இன்டென்ஸிவ் கேர் யூனிட்’-லதான் இருந்தது.

அதுக்கப்புறம் நான் பி.யூ.சி., பி.டி.சி-ன்னு நூலறுந்த பட்டம் மாதிரி அந்தரத்துல பறந்திட்டிருத்தேன். கடைசியா அந்தப் பட்டம் வந்து எறங்கினது – சாதுல்லா தெருவில இருக்கிற 17-ம் நம்பர் வீட்டு மொட்டைமாடியிலதான். அதுதான் வில்லன் நடிகர் எஸ்.வி. ராம்தாஸ் சாரோட வீடு. நாடகத்துக்குக் கூட்டிட்டுப் போறத்துக்கு முன்னாடி எனக்கு அவரு நெறைய அட்வைஸ் பண்ணாரு.

“நாடகத்துல நடிச்சு முன்னுக்கு வரணும்னா கெளரவம் பாக்கக்கூடாது; துணியை மடிக்கணும், பெட்டியைத் தூக்கணும், படுதா இழுக்கணும். எந்த வேலையா இருந்தாலும் செய்யணும். அப்போதான் சீக்கிரமா முன்னுக்கு வரமுடியும்’னு சொன்னாரு! நான் நாடகத்துல மொத மொத போட்டது பட்லர் வேஷம். அதுக்கப்புறம் போகப் போக எஸ்.வி. ராம்தாஸ் போட்ட வேஷத்தைத் தவிர, மீதி எல்லா வேஷத்தையும் மாறி மாறிப் போட்டுக்கிட்டிருந்தேன். வேஷம் முடிஞ்சவுடனே ஓடிப்போய்ப் படுதா இழுப்பேன் (ஏன்னா சீக்கிரமா முன்னுக்கு வரணுமே!). ஒரு நாள் நாடகத்தோட கதாநாயகி அவசரம் அவசரமா கூப்பிட்டாங்க. ஓடிப்போய்ப் பார்த்தா, அந்த அம்மா பொடவையைக் கட்டி முடிச்சிட்டு அப்போதான் கொசுவத்தைச் செருகிக்கிட்டிருந்தாங்க. `என்ன?’னு கேட்டேன். `குனிஞ்சு கால்கிட்ட இருக்கிற புடவையைச் சரியா இழுத்து விடு’னு சொன்னாங்க. `படுதாவை இழுத்தாத்தானே முன்னுக்கு வரமுடியும்’னு சொன்னாங்க! புடவை இழுத்தாலும் வரமுடியுமோ? சரின்னு அதையும் சரியா இழுத்துவுட்டேன். இப்படிக் கண்ணுங்கருத்துமா இருத்த என் நெனப்பெல்லாம் யாராவது பிரபல டைரக்டர் வந்து நாடகத்தைப் பார்த்து, என்னோட நடிப்பை மெச்சி, என்னை அப்படியே கொத்திக்கிட்டுப் போயிடுவாங்கனுதான் இருந்திச்சு! ஆனா, என்னோட துரதிர்ஷ்டம், நாடகம் முழுக்க முழுக்க வெளியூர்லயே நடந்திச்சு…

பார்த்திபன்

அந்த மூணு வருஷத்துல நாடக மேடையில நான் கத்துக்கிட்ட விஷயங்கள் ஏராளம். அதில கடைசியா கத்துக்கிட்டது- இப்படி தூரதேசத்தில போய் நாடகத்துக்கு ராஜா வேஷம் போடறதை விட உள்ளூர் சினிமாவுல சிப்பாய் வேஷம் கேட்டு அலையறது புத்திசாலித்தனம்னு புரிஞ்சிச்சு!

இதுக்கிடையில என்னோட தூரத்து உறவுக்காரரான பி.வி. பாலகுரு சார்கிட்ட நடிக்க சான்ஸ் கேட்டுப் போனேன். அந்த நேரத்துல பாக்யராஜ் சாரும் அங்கே வேலை கேட்டு, வந்து போய்க்கிட்டிருந்தாரு. அந்தச் சமயத்துலதான் எஸ்.ஏ. ராஜ்கண்ணு, பாரதிராஜா டைரக்ஷன்ல `16 வயதினிலே’ங்கிற படத்தை ஆரம்பிக்கறதா இருந்தார். அந்தப் படத்துக்கு பாலகுரு சார்தான் அசோஸியேட் டைரக்டர். அவருக்கும் ஒரு அசிஸ்டெண்ட் தேவைப்பட்டதால என்னைக் கூப்பிட்டு “நடிக்கிறதெல்லாம் அப்புறம் பாக்கலாம், மொதல்ல அசிஸ்டெண்டா சேரு”ன்னு அம்மன் கிரியேஷன்ஸ் ஆபீஸுக்குக் கூட்டிட்டுப் போனார். `ஒரு `சூப்பர் ஸ்டார்’ உருவாகிறதைக் கெடுத்து, அசிஸ்டெண்ட் டைரக்டரா நம்மளை மாட்டிவிடப் பார்க்கிறாரே’ன்னு அவர் மேல எனக்கு ஏகப்பட்ட கடுப்பு.

பார்த்திபன்
பார்த்திபன்

அவரோட சதித்திட்டத்தை எப்படிடா முறியடிக்கிறதுன்னு நான் யோசிச்சுக்கிட்டே போனேன். ஆபீஸ் போய்ச் சேர்ற வரைக்கும் ஐடியா ஒண்ணுமே கிடைக் கலை. அங்கே போனப்போ பாரதிராஜா சாரும், ராஜ் கண்ணு சாரும் இருந்தாங்க. என் கையெழுத்து அழகா இருக்குதானு பாக்கறதுக்காக எழுதிக் காட்டச் சொன்னாங்க! அப்பதான் மண்டைக்குள்ளே மின்னல் அடிச்ச மாதிரி ஒரு ஐடியா வந்தது. `டேய்! நீ அழகா எழுதிக் காட்டினா உன்னை அசிஸ்டெண்டா சேர்த்துக்குவாங்க. அப்புறம் உன்னோட நடிப்புத் திறமையை நாடே இழந்துடும்! யோசி. யோசி…’ அப்படீனு ஒரு எச்சரிக்கை குரல் கேட்டுச்சு.. யோசிச்சேன்! கிறுக்கல் கிறுக்கலா எழுதிக் காட்டினேன். மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டாங்க. நம்ம ஐடியா வொர்க் அவுட் ஆயிடிச்சுங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன்.

அங்கிருந்து திரும்பிப் பாக்காம ஓடி வந்துட்டேன். மீண்டும் பழைய படி ரேடியோ நாடகம், டி.வி. நாடகம், மேடை நாடகம், டப்பிங் – இப்படிப் போகாத பொழுதைப் போக்கிக்கிட்டிருந்தேன்.`16 வயதினிலே’ படம் ரிலீஸானதுக்கு அப்புறம் பாத்தா அந்தப் படத்துல அசிஸ்டெண்டா வொர்க் பண்ணின பாக்யராஜ் சார், ரெண்டு சின்ன வேஷத்துலயும் நடிச்சிருந்தாரு, `அடடா! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டமே’னு வருத்தப்பட்டேன். அசிஸ்டெண்டா இருந்தாக்கூட நடிக்கலாம்ங்கிறதை அப்போதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

அந்த நேரம் பாத்து எங்க அப்பா வேற, வேலையை ராஜினாமா பண்ணிட்டதால, நாங்க குடும்பத்தோட அரும்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்தோம். பஸ் வசதி சரியா இல்லைங்கிறதால, அப்போ அரும்பாக்கம்ங்கிறது ஒரு வெளியூர் மாதிரி. அங்கேருந்து அரும்பாடுபட்டு சினிமா சான்ஸ் தேடறது ரொம்ப சிரமமா இருந்தது. அதனால நான் `புத்தரால பிரபலமான போதி மரம்’னு தத்துவம் சொன்ன பாக்யராஜ் சாரால பிரபலமான 92 சி-ங்கிற லாட்ஜுக்குள்ளே மெதுவா என் வலது காலை எடுத்து வெச்சேன். ஏன்னா… வேகமா வைக்க முடியாது. வெச்சா, கால் சாக்கடைக்குள்ளே இருக்கும். சாக்கடையைக் கடந்து ரூமுக்குப் போறதுக்கு செங்கல்லை வெச்சு ஒரு `புதிய பாதை’ அமைச்சிருந்தாங்க.

பார்த்திபன்
பார்த்திபன்

ஏழடி அகலம் இருந்த அந்த என்னோட ரூம்ல எட்டுப் பேர் தங்கியிருந்தாங்க. யார் முன்னால வர்றாங்களோ அவங்க காலை நீட்டிப் படுக்கலாம். அப்புறம் வர்றவங்க காலை மடக்கிப் படுக்கலாம். அதுக்கு அப்புறம் வர்றவங்க உட்காரலாம். ஆனா, நம்ம மாதிரி எதுலயுமே லேட்டா வர்றவங்க நிக்க மட்டுமே முடியும். உள்ளே நிக்கறதைவிட வெளியில பிளாட்பாரத்துலயாவது படுக்கலாம்னு ஒரு நாள் வந்து படுத்தேன். தலைக்கு மேலே ஒரு விளக்குக் கம்பம் இருந்தது. விளக்குக் கம்பத்துக்குக் கீழே படிச்சவங்கதான் பெரிய ஆளாயிருக்காங்க… நாம படுத்தே பெரிய ஆளாயிடலாம்னு கனவோடு கண்ணை மூடினேன்.

சில பேரை `சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?’னு கேட்டிங்கன்னா. `அது ஒரு விபத்து’னு சொல்லுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும், பல விபத்துகளைச் சந்திச்ச பிறகுதான் என்னால சினிமாவுக்கு வர முடிஞ்சது.

தோ ஒரு முரட்டுத் துணிச்சல்ல (கல்யாணம் பண்ணிக்காமயே) நான் தனிக்குடித்தனம் வந்துட்டேன். அங்கே வந்ததிலேர்ந்து படிப்படியா `முன்னேற்றம்!’ ஒரு வேளைப் பட்டினி ரெண்டு வேளையாச்சு. ரெண்டு வேளை மூணு வேளையாச்சு. நானாவது டீ குடிச்சு வயித்தை நெரப்பிக்கிட்டிருந்தேன். பக்கத்திலே இருந்தவங்க வெறும் பீடியைக் குடிச்சே வயித்தை நெரப்பிக்கிட்டிருந்தாங்க. இதுக்கு என்னதான் முடிவுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். “சாமியே சரணம்”னு ஒரு சத்தம் கேட்டுச்சு. பக்கத்து ரூம்ல தீவிரமான ஐயப்ப பக்தர் ஒருத்தர் சரணம் சொல்லிக்கிட்டிருந்தாரு. சரி, ஐயப்பன் கோயிலுக்குப் போயிட்டு வந்தாலாவது நம்ம கஷ்டம் தீராதானு ஒரு ஏக்கத்தோட அவருகிட்ட போயி, “ஐயா, இந்த ஐயப்பன் கோயிலுக்குப் போறது எப்படி? என்ன?”னு விவரம் கேட்டேன். அதுக்கு அவரு தெய்வீகச் சிரிப்போட “உன்னால முடியாது தம்பி. அதுக்கு ரொம்ப பக்தி சிரத்தையா இருக்கணும். ஒரு நாளைக்கு, ரெண்டு வேளை குளிக்கணும். ஆனா, ஒரு வேளைதான் சாப்பிடணும்”னு சொன்னாரு. ஒரு தடவை அவரை ஏற இறங்கப் பார்த்தேன். ஒரு வேளை சாப்பிடற இவரே தீவிரமான பக்தர்னா, ஒரு வேளைகூடச் சாப்பிடாத நான் எவ்வளவு தீவிரமான பக்தனா இருக்க முடியும்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு மறுநாளே மாலை போட்டுக்கிட்டேன்.

பார்த்திபன்

மாலை போட்டுக்கிட்டதால என்னோட பிரச்னைக்குத் தீர்வு கெடைச்சுதோ இல்லியோ, என் பட்டினிக்கு ஒரு அர்த்தம் கெடைச்சுது. சும்மா சொல்லக் கூடாது. அந்த ஐயப்பனும் என்னைக் கைவிடலை. தினசரி ஒரு வேளைச் சாப்பாட்டுக்காவது வழி பண்ணிட்டாரு. ஆனா, சபரிமலைக்குப் போறதுக்குப் பணம் வேணுமே… என்ன பண்றதுன்னு உண்டியல் குலுக்கறதை தவிர வேற வழியில்லைனு தெரிஞ்சுக்கிட்டேன். குலுக்கினா சத்தம் வரும். ஆனா, சத்தம் வராம சாமி பேரைச் சொல்லி நன்கொடை வாங்கறதுன்னு முடிவு பண்ணினேன். பக்கத்துக் கடையில ஒரு நாப்பது பக்க நோட்டு வாங்கினேன். அதுலயும் ஒரு குழப்பம்.

மொத மொதல்ல போணி பண்றவன் பெரிய மனசோட `ரெண்டு ரூபாய்’னு எழுதிட்டான்னா, அதுக்கப்புறம் வர்றதெல்லாம் `பைசா கணக்கு’ல வருமேனு பயந்துபோயி பேனாவை எடுத்தேன். புள்ளையார் சுழி போட்டேன். `சின்னசாமி – ரூபாய் 51’னு எழுதினேன். அப்படியே கொண்டு போயி ஒரு நண்பர்கிட்ட காட்டினேன். அவரு பார்த்துட்டு “சின்ன சாமியே 51 ரூபா போட்டுருக்கான்னா நான் என்ன கொறைஞ்சவனா?” அப்படின்னுட்டு எழுத ஆரம்பிச்சாரு… 101 ரூபா எழுதுவாரோன்னு பார்த்தேன். ஆனா அவரும் அதே 51 ரூபா எழுதினாரு. ஆனா அதுககப்புறம் எழுதினவங்க எல்லாம் மேல இருக்கிற வரியைச் சட்டைபண்ணாம சொந்தப் புத்தியும் மாறாம 5, 3, 2. 1-னு சுருக்கி எழுதிட்டாங்க! ஒருவழியா காசு சேர்ந்தது. நானும் சபரிமலைக்குப் போயிட்டு வந்துட்டேன். இதுவரைக்கும் `யாரு அந்த சின்னசாமி?”னு யாருமே கேக்கலை!

சபரிமலையிலேருந்து திரும்பி வரும்போது ஒரு முடிவோட வந்தேன். மனசு திருப்திக்கு இந்த சினிமா, டிராமா, டப்பிங் இதெல்லாம் வச்சுக்கலாம். ஆனா, வயித்துக்கு வேற ஏதாவது பொழைப்பு தேடலாம்னு தீர்மானிச்சேன். எங்க அப்பாவுக்குத் தெரிஞ்ச ஒருத்தரு `ராவ்’னு பேரு… லஸ் கார்னர்ல ரப்பர் ஸ்டாம்ப் செய்யற கடை வெச்சிருந்தாரு. அவருகிட்ட ரப்பர் ஸ்டாம்ப் ஆர்டர் வாங்கிக் கொண்டு போய்க் குடுத்தோம்னா ரூபாய்க்கு நாற்பது பைசா குடுப்பாரு. ஒரு நாளைக்கு முப்பது நாற்பதுகூடச் சம்பாதிக்கலாம்னு சொன்னாரு. அவருகிட்டேயே ஒரு அஞ்சு ரூபா வாங்கி சட்டை பாக்கெட்ல செருகிக்கிட்டு, சட்டையை எடுத்து பாண்டுக்குள்ளே செருகிக்கிட்டு வேகமா நடந்தேன்.

மொதல்ல ஒரு கடைக்குப் போயி “ரப்பர் ஸ்டாம்ப் வேணுமா?”னு கேட்டேன். “வேணாம்”னு சொன்னாங்க. “ஒகே. தாங்க்யூ”னு சொல்லிட்டு, அடுத்த கடைக்குப் போனேன். அங்கே, “அப்புறம் பார்க்கலாம்”னு சொன்னாங்க… “சரி, பார்க்கலாம்”னு வந்துட்டேன். இப்படியே நாள் பூரா சுத்திட்டு ராத்திரி ஒன்பது மணிக்கு ராவ் கடைக்கு வந்தேன். “என்னப்பா?”னு கேட்டாரு! “மொதல்ல டீ சொல்லுங்க… அப்புறம் விஷயத்தைச் சொல்றேன்”னு சொன்னேன். சொன்னாரு… குடிச்சேன்.

பார்த்திபன்

சின்னதா ஒரு புத்துணர்ச்சி வந்ததுக்கப்புறம், “மிஸ்டர் ராவ்! மெட்ராஸ்ல எல்லாக் கடையிலேயும் ரப்பர் ஸ்டாம்ப் இருக்காம்! யாரைக் கேட்டாலும் வேணாம்னு சொல்றாங்க. சினிமாவுல சான்ஸ் தேடுறதைவிட இது ரொம்ப கஷ்டமான வேலை. அதுக்கும் இதுக்கும் ஒரே ஒரு சின்ன வித்தியாசம். சினிமாவில சான்ஸ் கேட்டா `இல்லை’னு சொல்லுவாங்க. இங்கே ரப்பர் ஸ்டாம்புக்கு ஆர்டர் கேட்டா `இருக்கு’னு சொல்றாங்க! பதில்தான் வேறயே தவிர பாடு என்னமோ, நாய்பட்ட பாடுதான்…! என்னைக் கேட்டா.

நீங்ககூட உங்க தொழிலை மாத்திக்கிறது நல்லதுன்னு நெனைக்கிறேன்” அப்படீன்னு சொல்லிக்கிட்டே போனேன். அவர் முகத்துல எந்த விதமான ரியாக்ஷனும் இல்லே…“என்ன சார்?”னு கேட்டேன். அதுக்கு அவரு “இதப் பாரு தம்பி வேணாம்னு சொன்னா உடனே வந்துடக்கூடாது. உங்க ரப்பர் ஸ்டாம்ப்பைவிட, எங்க ரப்பர் ஸ்டாம்ப் ரொம்ப ஸ்ட்ராங்! இம்ப்ரெஷன் அழுத்தமா இருக்கும், லாங் ஸ்டாண்டிங்கா வரும், டியூரபிளா இருக்கும்”னு அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது நடுவில் புகுந்த நான் “ஏன் சார். லாங் ஸ்டாண்டிங்கா வரும் – டியூரபிளா இருக்கும்.

ரெண்டுக்கும் ஒரே அர்த்தம்தானே சார்?”னு கேட்டேன். அதுக்கு அவரு எரிச்சலோட “அட! இத்தக் கடையில இதைச் சொல்லு. அடுத்த கடையில அதைச் சொல்லு. இப்படி எதையாவது ஒண்ணைச் சொல்லி அவனைக் குழப்பினாத்தான்யா அவன் உனக்கு ஆர்டர் கொடுப்பான்!”னு சொன்னார்.

மறுநாள் அதே கடைகளுக்குப் போயி தெரிஞ்சவரைக்கும் குழப்பினேன். முடிஞ்சவரைக்கும் ஆர்டர் குடுத்தாங்க. இப்படியாக நாட்கள் நகர்ந்தன. கண்ணுல வெள்ளையா இருந்த பகுதி மஞ்சள் வழியா செவப்பா மாறிடுச்சு! எம்.பி.பி.எஸ். ஒருத்தரு அது மஞ்சள் காமாலையா இருக்குமோனு சந்தேகப்பட்டாரு! ஒரு வாரம் ரப்பர் ஸ்டாம்ப் வித்து சம்பாதிச்சதை ஒரு மாசத்துல அந்த எம்.பி.பி.எஸ்-கிட்ட சிறுகச் சிறுகக் கொடுத்தே சரிபண்ணிட்டேன்! காசுதான் கரைஞ்சுதே தவிர கண்ணு மட்டும் கலங்கியேதான் இருந்திச்சு. ரெண்டு தடவை `சீ’ சொல்லி இந்தப் பழம் புளிக்கும்னு மறுபடியும் ரூமுக்கே வந்து குப்புற அடிச்சுப் படுத்துக்கிட்டேன்.

ஒருத்தரு வந்து முதுகுல தட்டி எழுப்பி, “ஒரு காரெக்டருக்கு ட்ப்பிங் பேசணும், வர்றீங்களா?” அப்படீன்னு கேட்டாரு… அவரு `ளா’னு சொல்லி முடிக்கறதுக்குள்ளே நான் டப்பிங் தியேட்டர்லே இருந்தேன். பேர் சொல்லும்படியான ஒரு டைரக்டரோட படம் அது.

பார்த்திபன், சீதா

செகண்ட் ஹீரோவுக்கு வாய்ஸ் குடுக்கிறதுக்காக ஐந்நூறு ரூபா அட்வான்ஸா குடுத்தாங்க. என்னோட சின்னச் சின்ன கடன்களை அடைக்க இன்னும் இருநூத்தம்பது ருபா சம்பாதிக்கணும்ங்கிறது என்னோட மனக்கணக்கு. அன்னிக்குப் பூராவும் ஹீரோவே பேசிக்கிட்டிருந்ததால நான் பேசறத்துக்கு சந்தர்ப்பமே வரலை. பேக்-அப்னு சொன்னவுடனே வேகமா ஓடிப் போய் கையில இருந்த ஐந்நூறு ரூபாயைக் கடன்காரன் கையில குடுத் துட்டு, மறுநாள் சந்தோஷமா டப்பிங் தியேட்டருக்கு வந்தேன்.

நான் பேச வேண்டிய ஸீன் வந்தது. பேசினேன். பக்கத்துல இருந்த ஒடிசலான ஒரு அசோஸியேட் டைரக்டரு “வேற மாடுலேஷன்ல சொல்லுங்க”ன்னாரு. சொன்னேன். உடனே, இன்ஜினியர் ரூம்ல இருந்த டைரக்டரு மைக் வழியா, “இன்னும் கொஞ்சம் மாத்திப் பேசுங்க”னு சொன்னாரு… மாத்திப் பேசினேன். மாத்தி மாத்திப் பேசினேன்.

அந்த அசோஸியேட் டைரக்டரு, டைரக்டர்கிட்டப் போயி என்னமோ கிசுகிசுன்னார். கொஞ்சம் பொறுத்து, டைரக்டர் என்னைத் தனியாக் கூப்பிட்டு, “இந்த காரெக்டருக்கு உங்க வாய்ஸ் பொருத்தமா இல்லே… அடுத்த படத்துல அவசியம் சொல்லி அனுப்பறேன்”னு சொன்னாரு. உடனே என் கண்ணுல இருந்து பொலபொலன்னு தண்ணி வந்துருச்சு. அதைப் பார்த்த அவரு, “என்ன சார். இதுக்கெல்லாம் போயி ஃபீல் பண்றீங்க நீங்க?”னு கேட்டார். அதுக்கு நான், “என்னோட வாய்ஸ் சரியில்லைனு நீங்க சொன்னதுக்காக தான் வருத்தப்படலை சார்.

ஆனா, நேத்து நீங்க அட்வான்ஸா குடுத்த ஐந்நூறு ரூபாயை நான் கடன்காரனுக்குக் குடுத்துட்டேன். இப்போ நான் எப்படி அந்தப் பணத்தை உங்களுக்குத் திருப்பிக் குடுக்கப் போறேன்னு நெனைச்சுத்தான் சார் வருத்தப்படறேன்” அப்படீன்னு தயங்கினேன். அவரும் பரவாயில்லைனு ஏதோ எனக்குச் சமாதானம் சொல்லி அனுப்பிச்சாரே தவிர என் மனசு மட்டும் சமாதானம் ஆகலை.

ரூமுக்கு வந்தப்புறம், “இதுவரைக்கும் யாருமே என்னோட வாய்ஸ் சரியில்லேனு சொன்னதில்லை. ஆனா. இத்த கம்பெனில மட்டும் என்னைத் திருப்பி அனுப்பிட்டாங்களே”னு சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டேன். அப்போதான் ஒருத்தரு “அட்வான்ஸ் வாங்கினியே. அதுல ஒரு அம்பது ரூபாயை பல்லு தூக்கலான அந்த அசோஸியேட் டைரக்டருக்குத் தள்ளினியா?”னு கேட்டாரு. “இல்லே”னு சொன்னேன். “அதுதான் பிரச்னை”னு சொன்னாரு.

வெற்றியின் முதல் படிதான் தோல்வினு சொல்லுவாங்க. ஆனா, எனக்கு அடுத்த அடுத்த படியும் அப்படியேதான் இருந்திச்சு! இருந்தும்கூட. நான் மனசு தளரலை! தளராம இருக்கப் பழகிடுச்சு! இந்தச் சமயத்துலதான் பி.வி. பாலகுரு சாரோட `வேடிக்கை மனிதர்கள்’ங்கிற படத்துல நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா வேலை செய்யறதுக்கு சந்தர்ப்பம் கெடைச்சுது. மொதல் நாள் ஷூட்டிங்கில கிளாப் அடிச்சேன்… ரெண்டாவது நாள் எடிட்டிங் ரிப்போர்ட் எழுதினேன். மூணாவது நாள் டயலாக் எழுதினேன்.

முறையா நீச்சல் கத்துக்கிறது ஒரு ரகம், திடீர்னு தண்ணியில தள்ளிவிட்டு `கத்துக்கடா நீச்சல்’னு சொல்றது ரெண்டாவது ரகம். பாலகுரு சார் எனக்குக் குடுத்த வாய்ப்பு அந்த ரெண்டாவது ரகம். எப்படியோ திக்கித் திணறி, மூச்சுமுட்டி, படத்தை முடிச்சுட்டேன். படம் ரிலீஸாச்சு. நாங்க எதிர்பார்த்த வெற்றிக்குப் பதிலா எதிர்பாராத தோல்விதான் கெடைச்சிச்சு!

ரஜினியுடன் பார்த்திபன்

அடுத்தபடியா பாலகுரு சாருக்குப் படமும் இல்லை! எனக்கு வேலையும் இல்லை. ஏற்கெனவே வேலை இல்லாம இருந்த எங்க அப்பா அடிக்கடி வந்து எனக்கு ஆறுதல் சொல்லுவாரு. “கவலைப்படாதே, வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டவன்தான் முன்னுக்கு வருவான். அதனால தொடர்ந்து முயற்சி பண்ணு” அப்படீன்னு தைரியம் குடுத்துட்டுப் போவாரு.அதுக்கப்புறம், ரஜினி சார் நடிச்ச `புதுக் கவிதை’ படத்துல நடிக்கிறத்துக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கெடைச்சிச்சு! நானும் போய் நடிச்சிட்டு வந்தேன்… என்னோட நடிப்பைப் பார்த்த ரஜினி சார் “நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க”னு ஷூட்டிங் நடக்கும்போதே பாராட்டினார்.

அந்தப் படத்தோட ரஷ்ஷைப் பார்த்த பாலசந்தர் சார், “யார் இந்தப் பையன்..? நல்லாப் பண்ணியிருக்கானே”னு சொன்னதா எங்கிட்ட வந்து சில பேர் சொன்னாங்க. அதைக் கேட்டவுடனேயே என்னோட மனசுக்குள்ளே சந்தோஷம் சிறகடிச்சுப் பறக்க ஆரம்பிச்சிருச்சு. அந்தப் படம் ரிலீஸான நேரத்துல நானும் என் தம்பியும் திருச்சியில இருந்தோம். மொதல் நாளே அந்தப் படத்தைப் பாத்துடணும்னு கிளம்பினேன். ஆனா, திடீர்னுதான் ஞாபகம் வந்திச்சு. இடைவேளையில நம்மளை யாராவது அடையாளம் கண்டுபிடிச்சா, கூட்டம் கூடிடுமேனு என் தம்பியை மட்டும் தியேட்டருக்கு அனுப்பி வெச்சேன். அவன் எப்ப படம் விட்டு வருவான்னு வீட்டுலேயே காத்துக்கிட்டிருந்தேன். அவன் வந்தவுடனேயே, “என்னடா, என்னோட நடிப்பு எப்படி இருந்திச்சு?”னு ஆர்வத்தோட கேட் டேன்.

அதுக்கு அவன் ஒண்ணுமே பேசாம இருந்தான். ஒருவேளை நம்ம நடிப்பு அவனுக்குப் பிடிக்கலையோனு சந்தேகத்தோட “என்னடா பேசாம இருக்கே. என்னோட ஸீன் எப்படி இருந்திச்சுன்னு கேக்கறேன், நீபாட்டுக்குப் பேசாம இருக் கியே?”னு மறுபடியும் கேட்டேன்.அதுக்கு அவன், “நான் பார்த்த மேட்னி ஷோவில நீ நடிச்ச ஸீன் வரலை… ஒருவேளை ஈவினிங் ஷோவில வருமோ என்னவோ”னு வேறு எங்கோ பார்த்தவாறு சொன்னான். நான் அப்படியே பிரமை பிடிச்சவன் போல நின்னுட்டேன். என்னோட ஸீனை எடிட்டிங் போது வெட்டிட்டாங்கன்னு புரிஞ்சுது. என்னோட வாழ்க்கையில திருப்புமுனையா இருக்கும்னு நெனைச்சுக்கிட்டிருந்த ஒரு விஷயம். இல்லைன்னு ஆனவுடனே பழையபடி என் மனக்கோட்டை அப்படியே சரிஞ்சு விழறத்துக்குள்ள ஒரு முடிவுக்கு வந்தேன். இனிமே நமக்கு இந்த நடிக்கிற வேலையே வேண்டாம். முடிஞ்சா நிஜமா இருப்போம். அதாவது அசிஸ்டெண்ட் டைரக்டராவே இருப்போம்னு நேரா பாக்யராஜ் சார்கிட்டே வந்தேன்.

புதிய பாதை படத்தின் போது

இதுக்கு முன்னாடி ஆயிரத்துக்கு அஞ்சாறு தடவை குறைவா… (அதாவது, `கிழக்கே போகும் ரயில்’ல இருந்து `முந்தானை முடிச்சு’ வரைக்கும்) அவரை ஷூட்டிங்லயோ அல்லது ஆபீஸ்லயோ கூட்டத்துக்கு நடுவுலயோ பார்த்திருக்கேன்.

அப்பல்லாம் ரெண்டு கையையும் தயாரா வெச்சுக்கிட்டு காத்திருப்பேன். அகஸ்மாத்தா அவர் என் பக்கம் திரும்பினார்னா வானத்துல பறக்கற கருடனைப் பாத்துக் கீழே நிக்கற பக்தன் கன்னத்துல போட்டுக்கிற மாதிரி பெரிசா ஒரு கும்பிடு போடுவேன். என்னைக்காவது ஒரு நாளு “என்னய்யா?”னு கேப்பாரு… “இந்த…. நடிக்கிறதுக்கு” அப்படீன்னு தயங்குவேன். அவரும் “சரி வா… அடுத்த படத்துல பார்க்கலாம்”னு சொல்லுவாரு.நானும் அடுத்த படத்தையும் பாத்துட்டு மறுபடியும் போவேன். கிட்டத் தட்ட இது ஒரு தினத்தந்தி `சிந்துபாத்’ மாதிரி தொடர்ந்துக்கிட்டே இருந்தது.

(100 தடவையாவது தற்கொலை செய்துகொள்ள நினைச்சேன்… என்ற தலைப்பில் 14.05.1989, 22.05.1989 ஆகிய தேதிகளில் ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

https://cinema.vikatan.com/tamil-cinema/r-parthiepans-interview-after-pudhea-paadhai-movie-success-1989-2

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.