இந்த கட்டுரையின் முதல் பாகத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
கரண்ட் இல்லாத வீட்டுல காலிங்பெல்லை அமுக்கிக்கிட்டே இருந்தவன். புதுசா புத்தி வந்து கையால கதவைத் தட்டின மாதிரி, `முந்தானை முடிச்சு’ வரைக்கும் நடிக்க சான்ஸ் கேட்டுக் கால் கடுக்க நடந்த நான்… அதுக்குப் பின்னால “அசிஸ்டெண்டாவாவது சேர்த்துக்குங்க”னு பாக்யராஜ் சார் கிட்டே கொக்கா நின்னேன். ஆனா அவரு கொஞ்சங்கடப் பேச்சு மாறவே இல்லை.
வழக்கம் போல “அடுத்த, படத்துக்கு வா நடிக்க சான்ஸ் தர்றேன்”னு சொன்னாரு. இந்தப் பேச்சே வேண்டாம்னு மனசுல நினைச்சிக்கிட்டு அவரு கிட்ட “சார்! நான் ஒரு கதை சொல்றேன்.
உங்களுக்கு புடிச்சிருந்தா என்னை அசிஸ்டெண்டாவாவது சேர்த்துக்குங்க”னு நாலஞ்சு தடவை, அஞ்சாறு மாடுலேஷன்ல சொன்னேன். அதுக்கு அவரு, “எங்கிட்ட ஏற்கெனவே பத்துப் பேரு இருக்காங்க… இப்போ நான் என்னய்யா பண்றது?” அப்படீன்னார்.
ஒஹோ, இந்தப் பிரச்னைக்கு நம்மகிட்ட ஒரு ஐடியாதான் கேட்கறாரு போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு, “அதனால என்ன சார் பத்தோட பதினொண்னா நானும் இருந்துக்கறேன்”னு சொன்னேன். என் நச்சரிப்புத் தாங்காம “சரி… பாம்குரோவ் ஓட்டல்ல என் அசிஸ்டெண்ட்ஸ் இருப்பாங்க. அவங்ககிட்டே போய் நீ கதையைச் சொல்லு”ன்னார்.
பாம்குரோவ் ஓட்டல்ல என்னை மாதிரி இருபத்தஞ்சு பேரு, கையில ஃபைலோட கதை சொல்றத்துக்காகக் காத்துக்கிட்டிருந்தாங்க. `சரிதான்! இது சரியான கண்துடைப்பு வேலை’ அப்படீன்னு நினைச்சுக்கிட்டுத் திரும்பிப் போயிடலாமானு பாத்தேன். மறுபடியும் மனசைத் திடப்படுத்திக்கிட்டு வரிசையில கடைசியா போய் நின்னேன்.
இதுல வேற எனக்குப் பின்னாடி வந்த ஒருத்தரு க்யூவில நடுவில புகுந்துட்டாரு. எல்லாரும் ரூமுக்குள்ளே போய் அரை மணி நேரம் கழிச்சு வெளியே வந்தாங்க. ஆனா நடுவில புகுந்த நம்ம ஆசாமி மட்டும் `ஸ்பிரிங் கதவு’ மாதிரி போன வேகத்திலயே திரும்பி வந்து நம்மளை க்ராஸ் பண்ணும்போது “சே! கதையா கேட்கறானுங்க கபோதிப் பசங்க… நம்ம எது சொன்னாலும் புரிய மாட்டேங்குது. சரியான மாங்காப் பசங்க”னு திட்டிக்கிட்டே போனாரு.
சொன்னவரு மேல சந்தேகப்படறதா, இல்லே உள்ளே இருக்கறவங்க மேல சந்தேகப்படறதானு எனக்குப் புரியலை. மண்டையில இருந்ததுல பாதிக் கதை தொண்டையிலயே சிக்கிக்கிச்சு. ஏகாதசி அன்னிக்கு வைகுண்டம் கதவு திறக்கற மாதிரி, 77-ன்னு போட்டிருந்த அந்தக் கதவைத் திறந்த ஒருத்தரு, “இன்னும் எவ்வளவு பேருய்யா இருக்கீங்க? நீயும் `கதை’ சொல்லப் போறியா! போ… போ…” அப்படீன்னு `அன்பா’ சொல்லிட்டு வெளியில போயிட்டாரு.
அவரு சொன்ன ரெண்டு `போ’வுல, ஒரு `போ’ உள்ளே போறத்துக்கும், இன்னொரு `போ’ சீக்கிரமாவே வெளியில போறத்துக்காகவும் இருக்குமோன்னு யோசனை பண்ணிக்கிட்டே உள்ளே போனேன்.
உள்ளே டைரக்டர் ஆர். கோவிந்த ராஜ் (“கண்ணத் தொறக்கணும் சாமி”), ஆர்.பி. விஸ்வம் (“அறுவடை நாள்”), இளமுருகு (அசோஸியேட் டைரக்டர்) மூணு பேரும் இருந்தாங்க. மூச்சைப் பிடிச்சுக்கிட்டுக் கதை சொன்னேன். முடிஞ்ச உடனே மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துச் சிரிச்சாங்க. அதுல விஸ்வம் சார் மட்டும், “தம்பி… நீ சொன்னதை அப்படியே நாங்க டைரக்டர்கிட்டே சொல்றோம். அப்புறம் முடிவெடுக்க வேண்டியது டைரக்டருதான்…”னு ரொம்ப பழக்கப்பட்ட டயலாக் மாதிரியே சொன்னாரு. இருபத்தாறு பேர்கிட்டேயும் இதையே சொல்லியிருப்பாரோன்னு சந்தேகமா இருந்தது!
ஒரு நாள் `தேவி ஸ்ரீதேவி’ன்னு ஒரு படத்துக்கு டப்பிங் பேசிக்கிட்டிருந்தேன். அப்போ வீரபத்திரன்னு ஒரு நாடக நடிகரு மூச்சு வாங்க ஓடி வந்து, “அசிஸ்டெண்டா வரணும்னு சொன்னீங்களாமே… பாக்யராஜ் சார் உங்களைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரு” என்றார்.
விஸ்வம் சாரோட நமுட்டுச் சிரிப்புக்கு இப்பதான் எனக்கு அர்த்தம் புரிஞ்சுது. வித்தியாசமான முறையில நான் கதை சொன்னதா அவரு டைரக்டருகிட்ட சொல்லியிருக்காரு. அதனாலதான் இந்த `அழைப்பு மணி’ன்னு அப்புறம் எனக்குத் தெரிஞ்சது.
பாக்யராஜ் சார்கிட்டே போனேன். அஞ்சு நிமிஷம் எங்கிட்டே தனியா பேசினாரு அடுத்த அஞ்சு நிமிஷத்துல அலை வந்து காலை நனைக்க நின்னுக்கிட்டு அந்தச் சத்தத்தைவிட அதிகமான சத்தத்தோட சந்தோஷமா கத்தினேன் :ஏன்னா `நான் இப்போ பாக்யராஜ் சாரோட அசிஸ்டெண்ட்….’
`தாவணிக் கனவுகள்’ அசிஸ்டெண்ட் டைரக்டரா மட்டுமில்லாம, போஸ்ட்மேனுங்கற கெளரவ வேஷத்துல நான் நடிச்ச படம். சிவாஜி சார்கூட நடிச்சதனால என்னைப் பொறுத்தவரைக்கும் கெளரவமான வேஷம்.
`சின்ன. வீடு’ – அசோஸியேட் டைரக்டரா மட்டும் இல்லாம வசன ஒத்துழைப்புங்கற பெருமையான தனி டைட்டிலே கிடைச்ச படம்.
`ஆக்ரி ராஸ்தா’ – அமிதாப்பச்சன் நடிக்க, எங்க டைரக்டர் டைரக்ட் பண்ணின முதல் இந்திப் படம். அந்தப் படத்துல நானும் வொர்க் பண்ணினேங்கறது என்னைப் பொறுத்தவரைக்கும் பெருமையான விஷயம். அதுக்கப்புறம் `எங்க சின்ன ராசா’.
இடையில இடையில `விதி’, `அன்புள்ள ரஜினிகாந்த்’, `நான் சிகப்பு மனிதன்’ மாதிரி எங்க டைரக்டர் கெளரவ வேடத்தில நடிச்ச படங்கள். இப்படி ஆறேழு படங்கள் நான் வேலை செஞ்சேன்.`தாவணிக் கனவுகள்’ படம் ரிலீஸானதிலிருந்தே என்னைச் சில புரொடியூசர்ஸ் தேடி வர ஆரம்பிச்சாங்க.
அவங்ககிட்ட எல்லாம் “கண்டிப்பா இப்போ நான் படம் செய்யமாட்டேன். இன்னும் கொஞ்ச நாள் எங்க டைரக்டர்கிட்ட நான் வேலை செய்யணும். `இப்ப நீ ரெடி’ன்னு எப்ப அவர் சொல்றாரோ அப்பதான் நான் படம் பண்ணுவேன்”னு எல்லார்கிட்டேயும் சொன்னேன்.
நான் பொறுமையா இருந்ததனால, டைரக்டரே அவரோட சொந்தப் படமான
`முதல் பார்வை’யில என்னை டைரக்டரா அறிமுகப்படுத்தி முழுப் பக்க விளம்பரத்தில் -`மரியாதைக்குரிய மகாஜனங்களுக்கு வணக்கம்!
திரு. பாரதிராஜாகிட்டேருந்து உங்களுக்கு எப்படி ஒரு பாக்யராஜ் கிடைச்சானோ, அந்த மாதிரி இதே பாக்யராஜ்கிட்டேருந்து உங்களுக்கு ஒரு பார்த்திபன் கிடைக்கப் போறான். புத்திசாலியான என் மாணவனோட `முதல் பார்வை’க்கு நீங்க எல்லாம் ஆசி வழங்கணும்னு அன்போட கேட்டுக்கிறேன்’னு எனக்கு சர்டிபிகேட் குடுத்து கோலாகலமா பூஜை போட்ட அந்தப் படம், எதிர்பாராத காரணத்தால நின்னுபோச்சு.
`ராபர்ட் புரூஸ்’னு ஒருத்தர் பல முறை படையெடுத்தும் ஜெயிக்க முடியாம சோர்ந்து போய் ஒரு குகையில படுத்திருந்தாரு. அவரு கண்ல படற மாதிரி ஒரு சிலந்திப்பூச்சி தன்னுடைய கூட்டை அடையறத்துக்காக எத்தனை தடவை கீழே விழுந்தாலும் (தன்னுடைய மீசையில இருந்த மண்ணைத் தட்டிட்டு) மறுபடியும் மறுபடியும் ட்ரை பண்ணி, கடைசியில தன்னுடைய முயற்சியில் ஜெயிச்சிடுச்சாம். ஒரு சின்ன சிலந்திப்பூச்சி ஒரு பெரிய வெற்றிக்கே காரணமா இருந்திருக்கு.
இந்த இடத்துல எதுக்காக இந்த உதாரணத்தைச் சொல்றேன்னா, என்னோட
`முதல் பார்வை’யிலேயே கோளாறு ஏற்பட்டதுக்கப்புறம், நானும் அந்த புரூஸ் மாதிரியே மனசு உடைஞ்சு வாழ்க்கையையே முடிச்சுக்கலாம்ங்கிற முடிவோட பீச் மணல்ல உட்கார்ந்துக்கிட்டு, கடலையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன்.அப்போ கரையில கிடந்த ஒரு காகிதம் காத்துல அடிச்சுக்கிட்டு வந்து என் காலைத் தொட்டுச்சு. எடுத்துப் பிரிச்சுப் பார்த்தேன்.
`வாழ்ந்து என்ன செய்யப் போறோம்?செத்துத் தொலையலாமே!செத்து என்ன செய்யப் போகிறோம்?வாழ்ந்து தொலையலாமே!’
ஒட்டியிருந்த மணலுக்குள்ளே ஒளிஞ்சிருந்த அந்தச் சின்னக் கவிதை, என் மனசுக்குள்ளே ஒரு பெரிய பாதிப்பையே ஏற்படுத்திடுச்சு.என்னை மாதிரி, சாதிக்கணும்னு ஆசையிருந்தும் தோல்வியை மட்டுமே சந்திச்சுச் சோர்ந்து போயிருக்கறவங்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு சின்ன சிலந்திப்பூச்சியாகவோ அல்லது அந்தக் கவிதை பேப்பராகவோ இருந்திச்சுன்னா. நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.
`முதல் பார்வை’க்கும், `புதிய பாதை’க்கும் இடைப்பட்ட அந்த ஒண்ணரை வருஷத்துல சில தயாரிப்பாளர்கள் எனக்கு கார் அனுப்பி அவங்க கம்பெனிக்குக் கூட்டிட்டுப் போய் மாசக் கணக்குல கதை பேசிட்டு, கடைசியா ஏதோ ஒரு காரணம் சொல்லி வெறும் ‘கால் நடையா’ என்னை திருப்பி அனுப்பினாங்க.
அப்படிப்பட்ட சோகச் சம்பவங்களோட சுமை குறையாம இப்போ நான் எழுதினா சம்பந்தப்பட்டவங்களோட மனசை அது ரொம்ப சங்கடப்படுத்தும்.
மனசுல வலின்னா என்னனு முழுசா தெரிஞ்ச நான் மத்தவங்க மனதைப் புண்படுத்த விரும்பலை. என்னுடைய முன்னேற்றத்துக்குக் காரணமா இருந்தவர்கள்ல ஒருத்தர் ஹேம்நாக் பாபு.
அவர் மூலமாத்தான் என்னுடைய இந்தப் `புதிய பாதை’க்கு வழிகாட்டின சுந்தரம் சாரைச் சந்திச்சேன். கல்யாணம் பண்ணி வைக்காமலேயே நான் ‘மலடி’ன்னு கிண்டல் செஞ்ச சினிமா மனிதர்களுக்கு நடுவில் என்னுடைய முதல் பிரசவத்துக்கே காரணமான அவரு ஒரு சிறந்த மனிதர்.
படம் ரிலீஸான அன்னிக்கு சம்பந்தப்பட்ட டைரக்டரோ, நடிகரோ சினிமா தியேட்டருக்குப் போயி, ஜனங்களோட ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கத்தான் ஆசைப்படுவாங்க. ஆனா, என்னோட படம் (அதுவும் முதல் படம்) ரிலீஸானப்ப நான் ஊர்லயே இல்லை.
ரசிகர்களே சரணம்னு படம் எடுத்த நான், ரிலீஸன்னிக்கு சாமியே சரணம்னு சபரிமலைக்குப் போயிட்டேன். திரும்பி வந்து தியேட்டருக்குப் போனேன். எல்லா தியேட்டர் வாசல்லயும் `ஹவுஸ்ஃபுல்’ போர்டு இருந்திச்சு. அதைப் பார்த்ததும் என் கண் கலங்கி அந்த போர்டு அப்படியே அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகி, ஒரு பழைய ஸீன் ஞாபகத்துக்கு வந்தது.
`தாவணிக் கனவுகள்’ – பாக்யராஜ் சார்கிட்டே நான் அசிஸ்டெண்டா வொர்க் பண்ண முதல் படம். ஒரு நாள் டைரக்டர் கூப்பிட்டு, “கதைக்குத் தேவையான சில சின்னச் சின்ன ஷாட்டுகளை நீ போய் எடுத்துக்கிட்டு வாய்யா”ன்னு எங்கிட்ட சொன்னாரு. முதன்முதலா தனியா போய் ஷாட் எடுக்கச் சொல்றாரேன்னு பயந்து, “என்கூட வேற யாரையாவது அனுப்புங்க”னு சொன்னேன். அதுக்கு அவரு, “உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… தைரியமா போய் எடுத்துக்கிட்டு வா”ன்னு சொன்னாரு. தப்பாயிடுமோன்னு தயங்கினேன். “தப்பாயிட்டா நாளைக்கு மறுபடியும் எடுத்துக்கலாம்”னு நம்பிக்கையூட்டி அனுப்பி வெச்சாரு. அன்னிக்கு நான் எடுக்க வேண்டிய முதல் ஷாட், ஒரு சினிமா தியேட்டர் வாசல்ல தொங்கற `ஹவுஸ்ஃபுல்’ போர்டு. அவ்வளவுதான்! ஆனா, காமிரா வழியா அந்த போர்டைப் பார்க்கும்போது மனசுக்குள்ளே ஒரு சின்ன ஏக்கம். நாளைக்கு நம்ம படம் ரிலீஸாகும்போது இதே மாதிரி ஹவுஸ்ஃபுல் போர்டு எல்லா தியேட்டர்லேயும் இருக்கணும்னு ஆசைப்பட்டேன்! இப்போ நான் எழுதினதையெல்லாம் ஏதோ உபதேசம்னு நினைச்சுக்காதீங்க. முதன்முதலா ஸ்கூலுக்குப் போன பையன் வீட்டுக்குத் திரும்பி வந்ததும், ஐ.ஏ.எஸ். படிச்ச அப்பா அம்மாவுக்கு `அ’னா. `ஆ’வன்னா சொல்லிக் குடுக்கற மாதிரி, எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயத்தை எனக்குத் தெரிஞ்ச ஒரு பாஷையில சொல்லணும்னு ஆசைப்பட்டேன். எல்லாருக்கும் சினிமாவுல ஜெயிச்சதுக்கப்புறம் கார் வாங்கனும், பங்களா வாங்கணும்னு ஆசையிருக்கும். ஆனா, எனக்கு `ஆனந்த விகடன்’ல ஐம்பது மார்க்குக்கு மேல வாங்கித்தான் ஜெயிக்கணும்னு ஒரு ஆசை இருந்தது.
`புதிய பாதை’ படத்துக்கு விகடன்லே வந்த விமரிசனத்தைப் பார்த்தவுடனேயே மனசு `ஆனந்த விகடன்’ பெயரின், முதல் பாதியா ஆயிடுச்சு. ஆனாலும் நான் இந்த அளவுக்கு வளரக் காரணமா இருந்த `ஒருத்தர்’… நான் ஸ்கூல்ல படிக்கும்போது நாளைக்கு ரிசல்ட் வரும்னாக்கூட இன்னிக்கே ஓடிப்போய் என்னுடைய மார்க் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு வந்து சந்தோஷப்பட்ட `ஒருத்தர்’… நான் சினிமாவுல சேரப்போறேன்னு சொன்னவுடனே, கிண்டல் பண்ணினவங்களுக்கு நடுவுல என்னை உற்சாகப்படுத்தின `ஒருத்தர்’… நான் தோல்விகளைக் கண்டு சோர்ந்து போயி உட்கார்ந்திருந்த நேரத்தில எல்லாம் என் தோளைத் தட்டிக் கொடுத்து ஊக்கம் கொடுத்த `ஒருத்தர்’… என்னைப் பத்தி எனக்கே நம்பிக்கை இல்லாம இருந்த காலங்கள்லகூட, என் மேல நம்பிக்கை வெச்சிருந்த `ஒருத்தர்’… அந்த `ஒருத்தர்’ மட்டும் இன்னும் என் `புதிய பாதை’யைப் பாக்கலை! ஏன்னா, இன்னிக்கு அந்த `ஒருத்தர்’ உடலளவுல என்கூட இல்லை. அந்த `ஒருத்தர்’ – என் அப்பா!
– ரா.பார்த்திபன்