புதுச்சேரி : புதுச்சேரி அருகே ஓராண்டுக்கு முன் உடைந்த பிரெஞ்சு காலப் படுகை அணையை சரி செய்யாததால் தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். செல்லிப்பட்டு பிள்ளையார் குப்பம் இடையே பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அந்த அணை போதிய பராமரிப்பு இல்லாததால் 2016-ம் ஆண்டு சேதமடைந்தது. தற்காலிகமாக படுகை அணை சீரசெய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு சங்கரா பரணி ஆற்று வெள்ளப்பெருக்கில் அதன் பெரும்பாலான பகுதிகள் உடைந்தன.
அணையை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்த போதும் புதுச்சேரி அரசு கண்டுகொள்ளாததால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை தொடர்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஆற்றில் வரும் நீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதேநிலை நீடித்தால் சுற்றி உள்ள கிராமங்களில் அடுத்த ஆண்டே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். செல்லிப்பட்டு படுகை அணையை நம்பி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் அதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.