அரசு துறைகளின் இணையதளம், பேருந்து, ரயில், விமான சேவைகளின் டிக்கெட் விற்பனை இணையப்பக்கங்கள், பிரபலங்களின் சமூக வலைதளப்பக்கங்கள் ஆகியவை அடிக்கடி ஹேக் செய்யப்படுவது வழக்கம்.
உதாரணத்திற்கு, ஒரு பிரபலத்தின் சமூக வலைதளத்தில், ஒரு சர்ச்சையான கருத்தோ அல்லது புகைப்படமோ வெளியாகும். அதையொட்டி சர்ச்சை வெடித்த பின்னர், அந்த பிரபலம் தனது இணையப்பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளதாக அறிவிப்பார். இது கடந்த சில வருடங்களாக வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் இன்று முடக்கப்பட்டுள்ளது. இதை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில்,”எனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் குழுவினரோடு இணைந்து அதை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தில், இன்று காலை முதல் சுமார் மூன்றரை மணிநேரம் வீடியோ கேம் ஒன்று நேரலையில் (Facebook Live) ஒளிபரப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீடியோ கேம் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. அதில், ரசிகர்களும் கார்த்தியை குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team.
— Karthi (@Karthi_Offl) November 14, 2022
நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் இயக்கத்தில் மிகப்பெரும் பொருட்செலவிலும், எதிர்பார்ப்புக்கு இடையிலும் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமோக வெற்றியை பிடித்தது. அதில், கார்த்தி நடிந்த வந்தியத்தேவன் கதாபாத்திரமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அப்படத்தின் அடுத்த பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையொட்டி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை அடுத்து, திபாவளியை முன்னிட்டு பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்து வெளியான ‘சர்தார்’ படமும் வசூலை வாரி இறைத்தது. சில நாள்களுக்கு முன்னர்தான், உலகளவில் ரூ. 100 கோடி அளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனையடுத்து, நடிகர் கார்த்தி ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜூ முருகன் இயக்க உள்ளார். இதில், அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.