சென்னை: “முதல்வர், அமைச்சர்கள் நேரடியாக களத்தில் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். இதனால் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாத நிலை உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை குறித்து அறிவிக்கப்படும்” என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (நவ.14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழக முதல்வரின் நேரடி தலையீட்டால், சென்னையில் இன்று எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை. மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் இன்று கடலூர், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் நேரில் ஆய்வு செய்துவருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்துள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோரை அங்கேயே இருந்து நிவாரணப் பணிகளை கவனிக்கச் சொல்லியிருக்கிறார். அதேபோல், மயிலாடுதுறை பகுதிகளில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோரை அனுப்பி நிவாரணப் பணிகளைத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர், அமைச்சர்கள் நேரடியாக களத்தில் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொள்வதால், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாத நிலை உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்.
தற்போது, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்திருந்தால் ரூ.4800, முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000, பகுதி சேதமடைந்திருந்தால் ரூ.4100, கான்கிரீட் கட்டடங்கள் இடிந்திருந்தால் ரூ.95,000 இந்த வரையறைப்படிதான் அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. முதல்வரின் ஆய்விற்குப் பின் இந்த தொகைகளை உடனடியாக வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பிறகு, கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் பணிகள் செய்யப்படும். கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 99 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 52 ஆயிரத்து 751 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் அந்தப் பணிகளை செய்து வருகிறது.
எதிர்வரும் மழையை சமாளிக்க உரிய ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக தற்போது மழையை எதிர்கொண்டதுபோல, திறமையாக வரும் மழையையும் எதிர்கொள்வோம்” என்று அவர் கூறினார்.