நம்மில் பலர் வீடு வாங்க வேண்டும் என கனவு கண்டிருப்போம் ஆனால் ஒரு கிராமமே வாங்க வேண்டும் என கனவு கண்டிருப்போமா?
ஸ்பெயின் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசிக்காத ஒரு கிராமம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கிராமத்தின் மதிப்பு 2,27,000 யூரோ என்று சொல்கின்றனர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,16,87,873 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சால்டோ டி காஸ்ட்ரோ (Salto de castro) என்ற பெயருடைய இந்த கிராமம் ஸ்பெயின் நாட்டில் ஜமோரா மாகாணத்தில் போர்ச்சுகல் எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 44 வீடுகள், ஓட்டல், சர்ச், பள்ளிக்கூடம், நீச்சல் குளம் ஆகியவை உள்ளது. அத்துடன் குடியிருப்புகளை காக்க படை முகாமும் உள்ளது.
2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாங்கப்பட்ட இந்த கிராமம் சில நெருக்கடி காரணமாக சுற்றுலா தலமாக மாற்ற முடியாமல் போனது. இந்த கிராமத்தில் ஒரு ஓட்டல் அமைக்க திட்டமிட்ட உரிமையாளர் அந்தத் திட்டம் நிறைவேறும் என நம்பியிருந்த நிலையில் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டார்.
இந்நிலையில் தான் “நான் நகர்ப்புறத்தில் வசிப்பதாலும் இந்த கிராமத்தை பராமரிக்க முடியாததாலும் விற்கிறேன்” என இந்த கிராமத்தை விற்கும் உரிமையாளர் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஐடியலிஸ்டா (idealista) என்ற சொத்து தரகு வலைத்தளத்தில் விற்பனைக்கு பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த கிராமத்தை 100% வேலை செய்யக்கூடியதாகவும், லாபகரமாக மாற்ற 20 லட்சம் யூரோக்களுக்கு குறைவாக முதலீடு செய்தால் போதும் என அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வலைதள பக்கத்தை சுமார் 50,000-க்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இதில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கிராமத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் ஒருவர் இந்த கிராமத்தை வாங்க முன்பணம் கட்டி முன்பதிவும் செய்துள்ளார்.
உரிமையாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமான ராயல் இன்வெஸ்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ரோனி ரோட்ரிக்ஸ் இதுபற்றி கூறும்போது, “உரிமையாளருக்கு இங்கே ஒரு ஹோட்டல் கட்ட வேண்டும் என்று கனவு இருந்தது, ஆனால் அதை கிடப்பில் போட்டு விட்டார், மீண்டும் அந்த திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
1950-களில் ஐபெர்டியுரோ (Iberduero) என்ற ஒரு மின் உற்பத்தி நிறுவனம், இந்த கிராமத்தின் அருகே நீர்த்தேக்கத்தை கட்டும் ஊழியர்களுக்கு இங்கு வீட்டுவசதி செய்து வந்தது. இருப்பினும், வேலை முடிந்ததும், ஊழியர்கள் இந்த கிராமத்தை விட்டு வெளியேறினர், 1980-களில் முற்றிலும் அந்த கிராமத்தை விட்டு மக்கள் அனைவரும் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வரும் இந்த கிராமத்தை நீங்க வாங்கத் தயாரா?