வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் பைபாஸ் சாலை அமைத்தும் நெரிசல் குறையவில்லை. பொதுமக்கள் சாலையை கடக்க வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
இதனால் வேலைக்கு செல்பவர்களும், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்ல மாணவ, மாணவிகளும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், காளியம்மன் கோயில் பகுதியில் திண்டுக்கல் ரோடு, மதுரை ரோடு, மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு ஆகிய நான்கு ரோடுகள் சந்திப்பதால், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் கூடுதலாகவே இருக்கிறது. இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் நகர் முழுவதும் வாகனங்கள் ஸ்தம்பித்து விடுகின்றன.
இந்த பகுதியில் நிரந்தரமாக ஒரு போக்குவரத்து போலீசார் இருந்தும், போக்குவரத்து நெரிசல் சில நேரங்களில் அதிகமாகி விடுகிறது. எனவே நிலக்கோட்டையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நாலு ரோட்டில் ஒரு சிக்னல் விளக்கு அமைத்தது போல், வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் பகுதியிலும் ஒரு சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.