தமிழக-கர்நாடக அரசுக்கு பெரும் சவாலாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன், தமிழக சிறப்பு அதிரடிப்படையால் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். முன்னதாக, அவரது கூட்டாளிகள் பலரும் சிறைவாசம் அனுபவித்து வந்தனர். அந்த வகையில், 1987ஆம் ஆண்டில் வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையன், பெருமாள், ஆண்டியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, 35 ஆண்டுகள் சிறையில் இருந்த வீரப்பன் அண்ணனான மாதையனை விடுவிக்குமாறு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், அவர் சிறையிலேயே உயிரிழந்து விட்டார். அவரது விடுதலை தொடர்பான பரிந்துரை உடனடியாக ஏற்கப்பட்டிருந்தால் சிறையில் மாதையன் மரணம் அடைந்திருக்க நேர்ந்திருக்காது என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாதையன் உயிரிழந்த நிலையில், பெருமாள், ஆண்டியப்பனை விடுவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்த நிலையில், கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் பெருமாள், ஆண்டியப்பன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இரண்டு பேரை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, அதற்கான கோப்பில் ஆளுநர் கையெழுத்திட்டதால் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த கோரிக்கைக்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் அவர்கள் இருவரும் கோவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.