வழக்கில் இருந்து கணவரை விடுவிக்க வேண்டி காவல் நிலையம் சென்ற பெண்ணை 6 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கடலோர காவல்படை இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சிமரடு பகுதியைச் சேர்ந்தவர் சுனு. கோழிக்கோடு கடலோர காவல்படை இன்ஸ்பெக்டராக உள்ள இவர் மீது கொச்சி திருகாக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
புகாரில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது; ‘எனது கணவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கடந்த மே மாதம் இன்ஸ்பெக்டர் சுனுவை சந்தித்தேன். அப்போது அவர் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டினார்.
தொடர்ந்து அவரது வீட்டில் வைத்தும், கடவந்திரா என்ற இடத்தில் வைத்தும் சுனு உட்பட 6 பேர் சேர்ந்து என்னை பலாத்காரம் செய்தனர். அவரது மிரட்டலுக்கு பயந்து அப்போது புகார் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து திருகாக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள், கோழிக்கோடு சென்று இன்ஸ்பெக்டர் சுனுவை கைது செய்தனர். இளம்பெண்ணின் கணவரது நண்பர், கோவில் ஊழியர் உட்பட 3 பேரை வழக்கு தொடர்பாக போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான இன்ஸ்பெக்டர் சுனு, எர்ணாகுளம் முளவு காடு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது, பி.டெக் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.