ஹிங்கோலி: மஹாராஷ்டிராவில் மீண்டும் ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தியுடன் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் யாத்திரையை தொடங்கிய ராகுல், இதுவரை 6 மாநிலங்களில் 28 மாவட்டங்களில் பயணத்தை நிறைவு செய்துள்ளார். மகாராஷ்டிராவில் ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஓய்வெடுத்த அவர், இன்று மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளார்.
68வது நாளான இன்று ஹிங்கோலி மாவட்டம் கலம்லூரியில் இருந்து நடைபயணமாக சென்ற அவருடன் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகம், ஒற்றுமை நடைப்பயணத்தின் போது விநியோகிக்கப்படுகிறது. மராத்தி மொழியில் சுமார் 600 புத்தகங்கள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.