ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பிரமாண்டமான பொருட் செலவில் வெளியான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இத்திரைப்படத்தின் பிரமாண்ட உருவாக்கம் மற்றும் அசர வைக்கும் காட்சி அமைப்புகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
குறிப்பாக, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணின் அறிமுகக் காட்சிகள் தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் காண்போரை பிரம்மிக்க வைத்திருந்தது. இதில், நடிகர் ராம் சரண் பெரும் மக்கள் திரளினுள் புகுந்து தப்பியோடும் போராட்டக்காரர் ஒருவரை வீர தீரத்துடன் கைது செய்வார். இந்தக்காட்சியில் மக்கள் திரளினுள் நுழைந்து நுழைந்து பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் கேமராவின் வேலைப்பாடுகளும், சீட்டின் நுனியில் கண் சிமிட்டாமல் அமரவைக்கும் திரைக்கதையும், புழுதியின் மத்தியில் பிரமாண்ட மக்கள் திரளை கண் முன் கொண்டுவரும் தொழில்நுட்ப வேலைப்பாடுகளும் காண்போரை மெய் சிலிர்க்க வைத்திருக்கும்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பேசிய நடிகர் ராம் சரண், ஆர்.ஆர்.ஆர் படத்தில் தனது அறிமுகக் காட்சியின் உருவாக்கம் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ” கிட்டத்தட்ட 3000 முதல் 4000 பேர் நடித்த இந்தக் காட்சியை எடுத்து முடிக்க 35 நாட்கள் ஆனது. எனக்கு சிறு வயதிலிருந்து டஸ்ட் அலர்ஜி இருக்கிறது. சைனஸ் அறுவை சிகிச்சை கூட செய்துகொண்டுள்ளேன். ஆனால், இந்தக் காட்சி எடுக்கும் 35 நாட்களும் புழுதியில்தான் பணியாற்ற வேண்டியிருந்தது. இந்த 35 நாட்களில் சிலர் படமே எடுத்துவிடுகின்றனர். நடிகர் அக்ஷய்க் குமாரின் (பிருத்விராஜ்) திரைப்படம் 42 நாட்களில் எடுக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன்” என்று கூறினார்.
மேலும், “நல்ல படங்கள், நல்ல கதைகள்தான் மக்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும். இன்று தென்னிந்திய சினிமா, வட இந்தியா சினிமா என்ற வேறுபாடுகளெல்லாம் இல்லை, எல்லாம் இந்திய சினிமாதான். நம் மாநிலங்களின் எல்லையைத் தாண்டி நமது சினிமா சென்றிருக்கிறது. எல்லா தரப்பினரிடமும் சினிமா சென்று சேர்கிறது. குஜராத், பெங்காலி இயக்குநர்களிடம் பணியற்றும் ஆசையும் இருக்கிறது. எங்கள் ரசிகர்களிடம் இருந்து நாங்கள் பெறும் இந்த அன்பு உண்மையிலேயே மிகப்பெரியது. நடிகர்களாக, மக்களை மகிழ்விப்பது மட்டுமல்ல, நம் தோள்களில் மிகப்பெரிய பொறுப்பும் உள்ளது. நட்சத்திர அந்தஸ்து என்பது ஒரு பெரும்பொறுப்பு” என்று கூறினார்.