இப்படியே போனா அப்புறம் ஃபைன் போட வேண்டிவரும்… தமிழக அரசை எச்சரித்த ஐகோர்ட்!

தென்காசியை சேர்ந்த சுனிதா என்பவர், தனது கணவரை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிபதிகள், “சென்னை உயர் நீதிமன்ற மற்றும் மதுரைக் கிளையில் தினந்தோறும் ஏராளமான ஆட்கொணர்வு வழக்குகள் தாக்கல் ஆகின்றன. 4 முதல் 6 மாதங்கள் வரை இந்த வழக்குகள் விசாரிக்கப்படும். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப்புலனாய்வு பிரிவின் 2021 ஆம் ஆண்டுக்கான சிறைக் கைதிகளின் புள்ளி விவரம் தொடர்பான அறிக்கையின்படி தமிழகத்தில் தான் அதிக அளவில் அதாவது 1775 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய ஆண்டுகளின் கணக்கெடுப்புகளை பார்க்கும்போதும் 2011 இல் 983 பேர், 2012ல் 523 பேர், 2013ல் 1781 பேர், 2014ல் 1892பேர், 2015ல் 1268 பேர், 2020ல் 1430 பேர் என தமிழகத்திலேயே அதிக அளவில் தடுப்பு காவல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை உயர இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும்.1.குற்றங்கள் அதிகரிப்பு 2. தடுப்பு காவலுக்கு அரசு இந்த சட்டத்தினை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது.

குண்டாஸ், போதை பொருள் கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்ட ஒன்பது காரணங்களுக்காக தடுப்பு காவல்கள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2022 ஜனவரி முதல் அக்டோபர் 31 வரை மதுரைக் கிளையில் மட்டும் குண்டாஸ் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி 961 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 517 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

45 வழக்குகளில் குண்டாஸ் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் தடுப்பு காவல் காலம் முடிந்த காரணத்தினாலேயே அந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. ஒரு வழக்கில்கூட குண்டாஸ் உறுதி செய்யப்படவில்லை. ஏறத்தாழ 86 சதவிகிதம் வழக்குகளில் குண்டாஸ் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை பொறுத்தவரை திருமங்கலம்- ராஜபாளையம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பணிக்கான நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக மனுதாரரின் கணவர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தவறான வார்த்தைகளால் பேசியதாகவும் மனுதாரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இது ஏற்கத்தக்க வகையில் இல்லை. ஆகவே இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் ஜெயராமனை விடுவிக்க உத்தரவிடப்படுகிறது. அவருக்கு 25 ஆயிரம் ரூபாயை 4 வாரங்களுக்குள் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

இந்த உத்தரவு எவர் மீதும் குற்றம் கண்டுபிடிப்பதற்கான முயற்சி அல்ல. ஆகவே மாநில அரசு இந்த உத்தரவை கருத்தில் கொண்டு தடுப்பு காவல் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். சட்ட விரோத தடுப்புக் காவலுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்து, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.