பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று கர்நாடக பால் கூட்டமைப்பு கர்நாடக அரசுக்கும், முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும் கோரிக்கை விடுத்தது. அத்துடன் பால் விலை உயர்வு பட்டியலையும் இணைத்து அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கன்னட தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதனை கர்நாடக அரசு மறுத்துள்ளது.
இதுகுறித்து பதிலளித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “கர்நாடக பால் கூட்டமைப்பு பால் விலையை உயர்த்துமாறு கோரியுள்ளது. இதுபற்றி ஆலோசித்து வருகிறோம். அதற்குள் பால்கூட்டமைப்பு பால் விலை உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதை நிறுத்திவைக்கும்படி பால் கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுத்தோம். அதற்கு பால் கூட்டமைப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்துவது தொடர்பாக வருகிற 20-ந் தேதிக்கு பிறகு ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்” என்றார்.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பால் விலை உயர்த்தப்பட்டால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.