நாடு முழுவதும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிற நிலையில், ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஆனால் அந்த ஸ்கூட்டர் அடிக்கடி தீப்பிடித்து எரிவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மக்களிடம் மோகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மோகத்தை பயன்படுத்தி பொதுமக்களை ஒரு கும்பல் ஏமாற்றி இருக்கிறது. பீகாரை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன் பதிவுசெய்து, அதற்கு பணமும் கட்டியிருக்கிறார்.
ஆனால் ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படவில்லை. இதையடுத்து இது குறித்து அந்த நபர் போலீஸில் புகார் செய்தார். போலீஸாரின் விசாரணையில் ஓலா பெயரில் மோசடி கும்பல் ஒன்று போலி வெப்சைட் அமைத்து அதன் மூலம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை என்ற பெயரில் மோசடி செய்வது தெரியவந்தது. உடனே போலீஸார் அந்த கும்பலை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். மொபைல் மூலம் அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடத்திய ரெய்டில் 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்காக தனி கால் சென்டரே நடத்தி வந்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து பாட்னா துணை போலீஸ் கமிஷனர் தேவேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ கர்நாடகா, டெல்லி, ஹரியானா உட்பட நாடு முழுவதும் 1000 பேரிடம் இந்தக் கும்பல் மோசடி செய்திருக்கிறது. பெங்களூரை சேர்ந்த இரண்டு பேர் இந்த மோசடிக்கு தேவையான போலி வெப்சைட்டை உருவாக்கி கொடுத்திருக்கின்றனர்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தேவைப்படுபவர்கள் இந்த வெப்சைட்டில் தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்தனர். அதிலிருந்து போன் நம்பர்களை எடுத்து அனைவருக்கும் கால் சென்டர் மூலம் போன் செய்து பேசியிருக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் ஸ்கூட்டர் கட்டணம், போக்குவரத்து, இன்சூரன்ஸ் கட்டணம் என பல்வேறு கட்டணங்களை கூறி அவற்றை ஆன்லைனில் டிரான்ஸ்பர் செய்யும்படி கேட்டிருக்கின்றனர். பொதுமக்களும் ரூ.60 முதல் 70 ஆயிரம் அளவுக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 20 பேரிடமிருந்து நூற்றுக்கணக்கான செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் போலீஸார் கூடுதல் தகவல்களை திரட்டி வருகின்றனர். ஓலா நிறுவனமும் இது குறித்து போலீஸில் புகார் அளித்திருக்கிறது.