ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் தமிழர் திருநாள் என்று சொல்லப்படும் பொங்கல் திருநாளை மக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடி பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் போற்றுவர். அதுமட்டுமல்லாமல், பொங்கல் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு.
அதிலும் குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.
இதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளன.
இதன் காரணமாக, சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், ஜல்லிக்கட்டிற்காக அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது